
தொடர் மழையால் புதுச்சேரியில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முக்கிய சந்திப்புகளான இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய பகுதிகளில் மழைவெள்ளம் இடுப்பு அளவிற்கு தேங்கியது.
இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், பாவாணர் நகர், பூமியான்பேட் உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளம் மெதுவாக வடிய தொடங்கியது.
ஆனாலும் இந்திராகாந்தி சிலை பகுதியில் தேங்கியிருந்த நீர் வெளியேறவில்லை. தொடர்ந்து 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. பாவாணர் நகர், பூமியான்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறவில்லை.
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.