வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னையில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து வினாடிக்கு  35 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அரை லிட்டர் பால் ரூ.100க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் குடிநீர் கிடைக்கவில்லை.

மாநகரின் பெரும்பாலான இடங்களில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதாலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் தமிழக அரசின் மீட்புக் குழுவினரால் உடனடியாக மீட்க வாய்ப்பில்லை என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதற்காக அன்புமணி ஏற்பாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து 10 பரிசல்களும், அவற்றை இயக்குவதற்காக 15 பரிசல் ஓட்டிகளும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் வெள்ளம் தேங்கியுள்ள அரும்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீட்கும் பணியில் இந்த பரிசல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில்  இன்று காலை 10.30 மணிக்கு பரிசல்கள் மூலம் மக்களை மீட்கும் பணியையும், உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் பணியையும் அன்புமணி தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து அசோக் நகர், மேற்கு மாம்பலம், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்படும் வரை பரிசல் இயக்கம், உணவு மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com