
புழல் சிறையில் கைதிகள்- சிறைக் காவலர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர மோதலில், ஜெயிலர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் இருவரை பணயக் கைதிகளாக, கைதிகள் சிறைப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை புழல் சிறையின் இரண்டாவது பகுதியில் விசாரணைக் கைதிகள் சுமார் ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களில் முஸ்லிம் சிறைக் கைதிகள், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி 2-இல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இத் தகராறில் கைதிகள், சிறைத்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் தாக்கத் தொடங்கினராம். இத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமணியும், காயமடைந்த ஜெயிலர் இளவரசனும் அங்கிருந்து வெளியே வந்துவிட்டனராம். இவர்களுடன் மேலும் இரு சிறைக் காவலர்கள் ரவி, மோகன் லேசாக காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் உதவி ஜெயிலர் குமார், எலக்ட்ரீசியன் மாரி ஆகிய இருவரும் அந்தக் கைதிகளிடம் சிக்கிக் கொண்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமணி, காயமடைந்த இளவரசன், ரவிமோகன் (34), செல்வின் தேவதாஸ் ஆகியோர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா, சென்னை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து வந்தனர்.
முன்னதாக புழல் சிறை அதிகாரிகள், குமாரையும், மாரியையும் விடுவிக்கக் கோரி கைதிகளிடம் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கைதிகள், அவர்களை விடுவிக்க மறுத்தனர். இதனால் புழல் சிறைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர புழல் சிறை வெளிப் பகுதியில் கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
மேலும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளும் சிறைக்கு வெளியே முகாமிட்டிருந்தனர். இதையடுத்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி, மௌரியா தொடர்ந்து கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் உதவி ஜெயிலர் குமாரையும், எலக்ட்ரீசியன் மாரியையும் கைதிகள் விடுவித்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த முத்துமணி, சிறைத்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைத்துறை அதிகாரிகளை சுமார் ஐந்தரை மணிநேரம் கைதிகள் சிறைப் பிடித்து வைத்திருந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் என்ன ?
புழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்களிடம் மோதியதற்கு அத்துறையினர் செல்லிடப்பேசியை அடிக்கடி பறிமுதல் செய்த சம்பவமே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த விவரம்:
சிறையில் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தொலைபேசி மையங்கள் சிறைக்குள்ளே தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கைதிகளைச் சோதனையிடுவதற்கு பேக்கேஜ் ஸ்கேனர் சிறை வாயிலில் பொருத்தப்பட்டுள்ளது.
அதோடு சிறை வளாகத்தில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில், சிறைத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம் சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டதாம்.
இதில் செல்லிடப்பேசி தொடர்ச்சியாகப் பறிமுதல் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களுடன் சோதனையிடச் செல்லும்போது, இரு தரப்புக்கும் ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதலில் இருந்து விடுவிப்பு வரை...
மாலை 5.30: புழல் சிறையின் உயர் பாதுகாப்பு பகுதியில் சிறைத் துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர்.
மாலை 6: கைதிகளுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல்.
மாலை 6.45: காயமடைந்த சிறைத்துறை அதிகாரிகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாலை 6.55: உதவி ஜெயிலர் குமார், வார்டர் மாரி கைதிகளால் சிறைப் பிடிப்பு.
இரவு 7.15: புழல் சிறை அதிகாரிகள், கைதிகளுடன் பேச்சுவார்த்தை.
இரவு 7.30: தகவலறிந்த சிறைத் துறை ஏ.டி.ஜி.பி.திரிபாடி, டி.ஐ.ஜி. மௌரியா ஆகியோர் புழல் சிறைக்கு வந்தனர்.
இரவு 8: நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறைக்கு வெளியே போலீஸôர் குவிப்பு.
இரவு 9: ஏ.டி.ஜி.பி. திரிபாடி தலைமையில்
கைதிகளுடன் பேச்சுவார்த்தை.
இரவு 9.45: பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கைதிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு.
இரவு 10: பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த குமார், மாரியை கைதிகள் விடுவித்தனர்.
விசாரணைக்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு
புழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்கள் மோதிக் கொண்டது குறித்து விசாரணை செய்ய ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த விவரம்:
புழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சிறைத் துறை அதிகாரிகளிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறைக் காவலர்களை விடுவிக்க, ஐந்தரை மணி நேரம் கைதிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது, அத்துறை அதிகாரிகளிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஏ.டி.ஜி.பி. ஜே.கே. திரிபாடி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களைப் பொருத்து, கைதிகள், சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.