மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதில் சிக்கல்

விருதுநகர்: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 70 சதவீத வனச் சரகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

விருதுநகர்: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 70 சதவீத வனச் சரகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிய வகை மூலிகைச் செடிகளும், மரங்களும் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, மான் போன்ற விலங்குகளும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை வனங்களைப் பாதுகாப்பது, மரங்களை வெட்டுவோரைக் கைது செய்வது, விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்து அவர்களைக் கைது செய்வது, விலங்கினங்களுக்கு உணவுக்காகத் தேவைப்படும் செடிகளை வளர்ப்பது, தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை வனச் சரகர் மேற்பார்வையில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் 10 வனச் சரக அலுவலர் பணியிடங்களுக்கு 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் 26 வனச் சரகர் அலுவலர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே உள்ளனர். இதே நிலை தான் மதுரை, திருநெல்வேலி உள்பட தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வனச் சரகர் காலிப் பணியிடங்களின் அளவு 70 சதவீதமாக உள்ளது. பணியில் இருக்கக் கூடிய 30 சதவீத வனச் சரக அலுவலர்களில் பெரும்பாலானோர் 55 வயதைக் கடந்த நிலையில் உள்ளனர். இதனால், காடுகளில் ரோந்து சுற்றி வருதல், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்தல், விலங்கினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுத்தல் ஆகிய பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

கடந்த ஆண்டு வனத் துறை சீருடைப் பணியாளர் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனவர் 120 பேருக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. வனத் துறை அலுவலர்கள் இல்லாததால், மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத் துறை அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தில் வனச் சரக அலுவலர், வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் காலிப் பணியிடங்களின் அளவு 70 சதவீதமாக உள்ளது. பணியில் உள்ள 30 சதவீத அலுவலர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் முழுமையாக ரோந்துப் பணியில் ஈடுபட முடியாது.

இதனால், சிலர் அரிய வகை மரங்களை வெட்டிச் செல்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் மான்கள், காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆகவே, வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வட்டாரங்கள் வலியுறுத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com