சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் குடும்பத்தார் மீது6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளில் புதுக்கோட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
Updated on
1 min read

தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளில் புதுக்கோட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா மீது பல்வேறு மோசடி புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள ஆணைக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகள்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் கடந்த 8 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், சசிகலா புஷ்பாவும், அவரது தாய் கௌரி ஆகியோர் பல முறை தாக்கியதோடு தங்களை வீட்டுச் சிறையில் வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார் குறித்து தூத்துக்குடி புறநகர் உதவி கண்காணிப்பாளர் தீபா ஞானிகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தார் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆபாசமாக திட்டுதல், கையால் அடித்தல், வீட்டில் சிறை வைத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கௌரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com