பாதுகாப்பற்ற நிலையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Updated on
2 min read

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையானது, மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரை தொடர்ச்சியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, களக்காடு முண்டன்துறை, தேனி மேகமலை, சாம்பல் நிற அணில்கள் சரணாலயங்களும், பொள்ளாச்சி ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தருமபுரியில் காவிரி வன உயிரினச் சரணாலயங்களும் உள்ளன. இந்தப் பகுதிகளில் மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வனச் சரகர்கள், வனப் பாதுகாவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைப் பாதுகாப்பது, மரங்களை வெட்டிக் கடத்துபவர்களைக் கைது செய்வது, விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து அவர்களைக் கைது செய்வது, விலங்கினங்களுக்கு உணவுக்காகத் தேவைப்படும் செடிகளை வளர்ப்பது, மலைகளை ஒட்டிய பகுதிகளில் விலங்கினங்கள் குடிப்பதற்காக தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில், மலைப் பகுதியில் ரோந்து சுற்றி வரும் வனச் சரகர்களுக்கு மட்டுமே பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு டார்ச் லைட், கைப்பை, கத்தி ஆகியவை ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு இந்தப் பொருள்களும் வழங்கப்படவில்லை. மலையில் புதிய ஆள்கள் நடமாட்டம், மரங்களை வெட்டுவோர் மற்றும் கடத்துவோரைக் கண்காணிப்பதுதான் இவர்களது முக்கியப் பணியாக உள்ளது. அதனால், இவர்கள் தனியாகவோ அல்லது 2, 3 பேர் கொண்ட குழுவாகவோ அடர்ந்த மலைப் பகுதியில் இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக, 4 நாள்கள் சாப்பாட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டு சென்று, ஆங்காங்கு தாற்காலிகக் குடிசை அமைத்து உணவைச் சமைத்து சாப்பிடுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் எந்தவித ஆயுதங்களும் இன்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போது, விலங்குகள் மற்றும் மரம் கடத்தும் கும்பலால் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையுள்ளது. எனவே, வேட்டைத் தடுப்புக் காவலர்களை தனியாகவோ அல்லது குழுவாகவோ மலையில் ரோந்துப் பணிக்கு அனுப்பாமல், வனச் சரகர் செல்லும் போது மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலையில் தனியாகவும், 2, 3 பேர் கொண்ட குழுவாகவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோம். சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகளிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களை வைத்திருப்பர். எங்களிடம் உள்ள கத்தியைக் கொண்டு அவர்களை நெருங்குவது உயிருக்கு ஆபத்தாக முடியும். வனப் பகுதியில் விலங்குகள் அல்லது மரக் கடத்தல் கும்பல் நடமாட்டம் தெரிந்தால், அதைப் பற்றி வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மலை அடிவாரத்துக்கு நடந்து வர வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மாதம் ரூ. 6,750 ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகைகூட பிடிக்கப்படுவதில்லை. எங்களது உயிருக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com