
சுகாதார மருத்துவர் எனக் கருதப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழந்து வருவதால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 498 பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட முறை சார்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தவிர, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 3 லட்சம், தனியார் துறையில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்கள் (ஹவுஸ் கீப்பிங்) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
பொது சுகாதாரத் துறையின் விதிமுறைகளின்படி, 223 குடும்பங்களுக்கு 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். ஆனால், தற்பொது ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு துப்புரவுத் தொழிலாளி என்ற எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிக்கு அரசு விதிமுறைகளின்படி மாதம் ரூ. 18,750 ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியருக்கு மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
நிரந்தரப் பணி மறுப்பு
மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் அரசுத் துறையில் பணி அமர்த்தப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு வந்தனர்.
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுவாமிநாதன் குழு தாக்கல் செய்த அறிக்கையில் துப்புரவுத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்யும் முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் குறைந்த நேரம் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுவதால், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தலாம் என்ற சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணிக்கு நிரந்தரப் பணியாளர்களை அரசு நியமிப்பதில்லை.
விதிமீறல்
மனித மலத்தை மனிதனே அள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் 2013-இல் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 2015-இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு முகக் கவசம், கையுறை, காலணி, தலைக் கவசம் என தலை முதல் கால் வரையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படாமல் தொழிலாளர்களை துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தினால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை வழங்க முடியும் என சட்டம் கூறுகிறது. ஆனால், மாநகராட்சி நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்களைத் தவிர, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.
பாதாள சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்வது, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளில் மனிதர்களைத் தவிர்த்து, இயந்திரங்களைக் கொண்டு மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
மறுக்கப்படும் காலமுறை ஊதியம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி மன்றக் குழு மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களின் தின ஊதியத்தில் வேறுபாடு காணப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ரூ. 290-ம், திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 325-ம், ஈரோடு மாவட்டத்தில் ரூ. 350-ம் என மாவட்டத்துக்கு மாவட்டம் ஊதியம் வேறுபடுகிறது.
ஊரகப் பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 3 ஆயிரம்- ரூ. 3,500 வரையில் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
குறையும் ஆயுள் காலம்
துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டாலும், எளிதாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பது உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரரின் கடமை ஆகும்.
ஒரு சில இடங்கள் தவிர, பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் உரிய மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதில்லை. இதனால், துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறைந்த வயதிலேயே நுரையீரலில் பாதிப்பு, காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவற்றுக்கு இலக்காகின்றனர்.
மேலும், பணிச் சுமை காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமை ஆகியுள்ளனர். இதன் காரணமாக, துப்புரவுத் தொழிலாளர்களின் சராசரி ஆயுள் காலம் என்பது 60 வயதில் இருந்து 45 வயதாகக் குறைந்துள்ளது.
தூய்மை பாரதம்
மத்திய அரசு சார்பில் 2014-ஆம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். ஆனால், அவர்களின் உடல் நலம், பணிப் பாதுகாப்பு, சலுகைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுக்கப்படும் குடியிருப்பு
பொதுவாக, அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்காக குடியிருப்புகள் அமைக்கப்படும். இதேபோல, நகர்ப்புறங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக குடியிருப்புகள் கட்டப்படாத காரணத்தால், நகர்ப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் குடியேறியுள்ளனர். குடியிருப்பு அமைப்புது குறித்து கோவை மாநகராட்சியில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியும் நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.செல்வகுமார் கூறியதாவது:
மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் நிரந்தரத் துப்புரவுத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ. 15 ஆயிரம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவ வசதி, காப்பீடு வசதி, வருங்கால வைப்பு நிதி, கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை போன்றவற்றைச் செயல்படுத்த வேண்டும். விஷவாயு தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயு வெளியேறும் வகையில் குழாய் அமைத்தால் மட்டுமே கட்டட உரிமம் வழங்க வேண்டும்.
பணியின் போது ஏற்படும் உயிரிழப்புக்கு விரைவாக நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அனைத்துவித சலுகை, மருத்துவ வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதேபோல, தனியார் துறைகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.
பகுஜன் சமாஜ் தூய்மைப் பணியாளர் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரா. தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:
துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறைந்த வயதிலேயே பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சராசரியாக 45 வயதில் உயிரிழக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.
மேலும், கருணை அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, வருவாய்த் துறையில் உள்ளது போல அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.