கவிஞர் சுகுமாரனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர் சுகுமாரனுக்கு இயல் விருது
Updated on
1 min read

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவீன எழுத்து உலகின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் சுகுமாரன். கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எழுத்தின் அத்தனை தளங்களிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருபவர். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து, தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார்.
கோடைக்காலக் குறிப்புகள், பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம், பூமியை வாசிக்கும் சிறுமி, நீருக்குக் கதவுகள் இல்லை ஆகிய 7 கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. சுகுமாரனின் கவிதைகள் இளம் தலைமுறை கவிஞர்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய தனித்துவம் மிக்க படைப்புகள்.
இவரின் வெல்லிங்டன் நாவல் காலனிய காலத்தின் உதகமண்டலத்தின் வரலாற்றை கூறும் தமிழின் முக்கிய படைப்பு. மொழிப்பெயர்ப்பிலும் அளப்பரிய பங்களிப்பைச் சுகுமாரன் செய்துள்ளார். கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் "தனிமையின் நூறு ஆண்டு' நாவலையும், அய்ஃபர் டுன்ஷின் அஸீஸ் பே சம்பவம் நாவலையும், பாப்லோ நெரூதா கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். மலையாளத்திலிருந்து வைக்கம் முகம்மது பஷீரின் "மதில்கள்', "சக்கரியாவின்' இதுதான் என் பெயர் ஆகிய நாவல்களையும் மொழிபெயர்த்துள்ளார். திசைகளும் தடங்களும், தனிமையின் வழி, இழந்த பின்னும் இருக்கும் உலகம், வேழாம்பல் குறிப்புகள் உள்பட 12 கட்டுரை தொகுப்புகளும் வந்துள்ளன. மெüனி படைப்புகள், தி.ஜானகிராமன் சிறுகதைகள் போன்றவற்றையும் சுகுமாரன் தொகுத்துள்ளார்.
எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோரைத் தொடர்ந்து சுகுமாரனுக்கு இயல் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கியப் பணிகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சுகுமாரனுக்கு, 2016-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இயல் விருது கேடயமும், பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா கனடாவின் டொரன்டோ நகரில் 2017 ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com