சீரமைப்பு தேவைப்படும் குற்றாலம்

தென்காசி: தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் விரைவில் சீசன் களைகட்டத் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Updated on
2 min read

தென்காசி: தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் விரைவில் சீசன் களைகட்டத் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான சீசன் நிலவும். அதைத்தொடர்ந்து, ஐப்பசி 1-ஆம் தேதி முதல் சபரிமலையில் மகர ஜோதி வரையிலும் ஐயப்பப் பக்தர்களின் வருகை அதிகரிக்கும்.

குற்றாலத்தில் சீசன் காலங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் சுமார் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வந்திருந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகப் பொழுதைப் போக்குவதற்கு ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இவற்றில் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள விஸ்வநாதராவ் பூங்காவைத் தவிர வேறு எந்தப் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலைதான் உள்ளது.

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள், சிற்றில்கள், குடில்கள் என ஏராளமாக உள்ளன. ஆனால், இவையனைத்தும் போதிய பராமரிப்பின்றியும், கட்டடங்கள் சேதமடைந்தும், யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட பராமரிப்புச் செலவுகளே அதிகமாகும்.

பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் அனைத்தையும் முழுமையாகப் பராமரித்து வாடகைக்கு விடுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த பயனடைவர். இதன்மூலம், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதிய கழிவறைகள் இல்லை.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஆர். சரத்குமார் தன்னுடைய சொந்தச் செலவில் ரூ. 7.5 லட்சத்தில் பேரூராட்சிப் பகுதியில் இ-டாய்லெட் என்ற நவீன கழிவறையை தென் மாவட்டங்களில் முதல் முறையாக குற்றாலத்தில் அமைத்தார்.

மேலும், இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அதைப் பராமரித்துக் கொள்ளுமாறு கூறி அதை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். ஆனால், அதை யாரும் பயன்படுத்த முடியாதவாறு, உள்ளே செல்லும் வழியை மூடிமறைத்து வைத்ததுடன், பயன்படுத்த முடியாதவாறும் செய்துவிட்டனர்.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகள்: குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே, அருவிப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவதற்கு போதிய இடவசதி செய்து தர வேண்டும்.

இங்குள்ள உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வீடுகளில் இருந்து உணவுகளைத் தயார் செய்து கொண்டு வந்து இங்கு உணவருந்திச் செல்கின்றனர். எனவே, இங்கு "அம்மா' உணவகம் அமைக்கப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வசதியாக இருக்கும்.

இதேபோல, ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்தில் மருத்துவமனை கிடையாது. இங்கு குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மருந்தகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்படும். எனவே, சீசன் காலங்களில் 24 மணி நேரமும் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை உள்ளடக்கிய மருத்துவமனை இங்கு செயல்பட வேண்டும்.

குற்றாலம், ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய பகுதிகளில் தனியார் மருத்துவமனையோ, மருந்துக் கடைகளோ கிடையாது. எனவே, குற்றாலத்தில் இயங்கும் மருந்தகம் தரம் உயர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் சீசன் காலங்களில் மட்டுமாவது 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.

குற்றாலத்தில் "அம்மா' மருந்தகம் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாகும்.

-பா. பிரகாஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com