முடங்கிக் கிடக்கும் சிறுமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்

திண்டுக்கல்: கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் சிறுமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் சி. சீனிவாசன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Updated on
1 min read

திண்டுக்கல்: கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் சிறுமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் சி. சீனிவாசன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்பட 800-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், காட்டு மாடு, புள்ளி மான், மிளா, கேளை ஆடு, சருகு மான், செந்நாய், தேவாங்கு உள்ளிட்ட வன விலங்குகளும் உள்ளன.

இதனால், கொடைக்கானலைப் போல, சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக சிறுமலையிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வனத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி வனத் துறை மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பில், சாணார்பட்டியை அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியிலிருந்து சிறுமலைபுதூரை அடுத்துள்ள கடமான்குளம் பகுதி வரை 5 கி.மீ. தொலைவுக்கு மலை ஏறுவதற்கான பாதை, செங்குத்தான சரிவு உள்ள இடங்களில் படிக்கட்டுகள், கடமான்குளம், தென்மலை பகுதிகளில் இரு பார்வையாளர் கோபுரம், அகஸ்தியர்புரம் அருகேயுள்ள வெள்ளிமலையான் கோயிலில் கிரிவலப் பாதை உள்பட ரூ. 6 கோடிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: அகஸ்தியர்புரத்திலிருந்து தென்மலை செல்லும் வழியில் 50 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் வனத் துறை திட்டமிட்டது. மேலும், 20 ஹெக்டேரில் புல்வெளி, 2 ஹெக்டேரில் பூந்தோட்டம், குழந்தைகள் பூங்கா, மூலிகைப் பண்ணை, வன விலங்குகள், செடிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்க தகவல் மையம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு வனத் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?: ரூ. 10 கோடியில் செயல்படுத்தப்பட வேண்டிய இந்தத் திட்டம் 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சி. சீனிவாசன் வனத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். எனவே, முடங்கிக் கிடக்கும் சிறுமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான முயற்சியை வனத் துறை, சுற்றுலாத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே

பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆ. நங்கையார்மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com