சிதம்பரம் அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தில் ராஜேந்திரசோழன் தனது தாய்க்காக ஒரு கோயிலை கட்டியுள்ளது கல்வெட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
சோழர் வரலாற்றில் ஒப்பற்ற மன்னராக விளங்கியவர் முதலாம் ராஜேந்திர சோழன். இவர் கி.பி. 1012ஆம் ஆண்டில் இளவரசராக முடிசூட்டப்பட்டார். பிறகு தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு கி.பி. 1014-இல் சோழப் பேரரசின் மன்னரானார்.
சிதம்பர மாளிகை: இவர் தனது பேரரசின் தலைநகரை தஞ்சையில் இருந்து மாற்ற திட்டமிட்டார். சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தேர்ந்தெடுத்து, மிகப் பெரிய சிவன் கோயிலைக் கட்டினார். மேலும், சுமார் 63 ஏக்கர் பரப்பில் அரச மாளிகை, கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டு, கி.பி. 1022ஆம் ஆண்டு முதல் புதிய தலைநகர் உருவாக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் சிதம்பரத்தை தாற்காலிக தலைநகராகக் கொண்டிருந்தார்.
வானவன் மாதேவி: தனது தாய் வானவன் மாதேவியிடம் தந்தையைக் காட்டிலும் அதிக அன்பு கொண்டிருந்தார். தாயார் இறந்த பிறகு அவர் நினைவாக மக்களுக்கு தானங்களை வழங்கினார். தமிழகத்தில் உள்ள சில கோயில்களுக்கு தாயின் பெயரில் நில தானங்களையும், கோயில்களில் விளக்கு எரிய பொன் தானங்களையும் வழங்கினார்.
அன்னைக்கோர் ஆலயம்: கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக, கி.பி. 1012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் திரிபுவன மாதேவி ஈஸ்வரம் என்ற சிவன் கோயில் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோயிலுக்காக ஜெயங்கொண்ட சோழநல்லூர், சத்திரியசிகாமணி நல்லூர் போன்ற ஊர்கள் தானமாக வழங்கப்பட்ட தகவலையும் கல்வெட்டு கூறுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மாதேவியார் ராஜேந்திர சோழனின் அன்னை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தக் கோயிலில் காணப்படும் கலை நுட்பங்களைப் பார்க்கும் போது தனது அன்னையின் நினைவாக ராஜேந்திரன் இந்தக் கோயிலைக் கட்டியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும், இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் ராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரும் இந்தக் கோயிலுக்கு தானங்களை வழங்கியுள்ளதையும் அந்த மன்னர்களின் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில், அதாவது செஞ்சி நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. இருந்தபோதும், முதலாம் ராஜேந்திர சோழன் பதவியேற்று ஆயிரமாண்டுகள் கடந்தாலும் தனது அன்னைக்காக அவர் கட்டிய கோயில் புவனகிரி பகுதியின் சரித்திரக் குறியீடாக திகழ்கிறது.
கல்வெட்டுக்கள் ஆய்வு: இந்தக் கோயிலில் உள்ள 10 கல்வெட்டுக்கள் மட்டும் கடந்த 1945, 1963ஆம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போதைய கள ஆய்வில் பதிவு பெறாத 48 கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் ரா.கோமகன், கல்வெட்டு ஆய்வாளர் இல.தியாகராஜன் ஆகியோர் தலைமையில் படியெடுத்து, முறையாக ஆவணப்படுத்தப்பட உள்ளதாக ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், ஆதிவராகநத்தம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் தனது தாய்க்காக கட்டியுள்ள திரிபுவன மாதேவி ஈஸ்வரம் என்ற சிவன் கோயில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.