

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தும் உரிமம் கிடைக்காததால், தலா ரூ. 75 லட்சத்தில் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு வாங்கப்பட்ட ரத்தத்தைப் பிரித்து வகைப்படுத்தும் கருவிகளை ("பிளட் செப்பரேட்டர்') பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மனித ரத்தம் ஏ, பி, ஏ.பி., ஓ என பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதற்கு ஏற்ற வகையில் பிளாஸ்மா, தட்டை அணுக்கள் (பிளேட்லெட்), சிவப்பு அணுக்கள் (ஆர்.பி.சி.), வெள்ளை அணுக்கள் (டபிள்யூ.பி.சி.) செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருவரிடமிருந்து பெறப்படும் ரத்தத்தை பிளாஸ்மா, தட்டை அணுக்கள் என அதன் மூலக்கூறுகளை 6 மணி நேரத்திற்குள் பிரிக்க வேண்டும். மூலக்கூறுகள் பிரிக்கப்படாத ரத்தத்தை 35 நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், மூலக்கூறுகளைப் பிரிக்கும் போது -40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஓராண்டு வரையிலும், -80 டிகிரி செல்சியசில் 5 ஆண்டுகள் வரையிலும் சேமிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ரத்த மூலக்கூறுகளைப் பிரிக்கும் இயந்திரம் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு தலா ரூ. 75 லட்சத்தில் ரத்தத்தைப் பிரித்தெடுக்கும் கருவிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு வாங்கப்பட்டன. ரத்தத்தை அளவீடு செய்யும் கருவி, சேமிப்பு சாதனம், பிளாஸ்மா ஃப்ரீஸர் உள்ளிட்ட கருவிகள், அந்தந்த மருத்துவமனை வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்காக பயிற்சி பெற்ற 4 செவிலியர்கள், 2 தொழில்நுட்பப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ரத்தத்தைப் பிரித்தெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து உரிமம் பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பித்தும், தற்போது வரை உரிமம் வழங்கப்படவில்லை என்பதால், இந்தக் கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரத்தத்தைப் பிரித்தெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தும் உரிமம் பெறுவதற்கான மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறையின் மண்டல அலுவலகங்கள் சென்னை, மதுரையில் செயல்பட்டு வருகின்றன. இவை உள் கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் தரத்தை ஆய்வு செய்து உரிமம் வழங்க வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்துவிட்டோம். உரிமம் கிடைக்கப் பெற்றவுடன் இந்தக் கருவிகள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.