தமிழை உயிர்ப்போடு வைத்திருக்க கலைச்சொல்லாக்கம் அவசியம்:தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பேச்சு
தமிழை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்க கலைச் சொல்லாக்கம் அவசியம் என தமிழ் வளர்ச்சி-செய்தித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் கூறினார்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் (திருக்குறளை மொழி பெயர்த்த தைவான் கவிஞர் யூஷி பிறந்தநாள்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் "காலந்தோறும் கலைச் சொல்லாக்கம்' என்ற தலைப்பில் த.உதயச்சந்திரன் பேசியது:
புதிய படைப்புகளைப் படைப்பதைக் காட்டிலும் மொழி பெயர்ப்பது கடினம். இதுபோல்தான் கலைச் சொல்லாக்கம்.
ஒரு சொல் எந்த மொழியிலிருந்து வந்துள்ளதோ, அதன் வேர்ச் சொல்லைப் பார்த்து பொருள் என்ன என்பதைக் கண்டுபிடித்து புதிய சொல்லை கொண்டு வர வேண்டும். அந்தச் சொல்லின் அசை ஏற்கெனவே உள்ள சொல்லின் அசைவோடு ஒத்திருந்தால் அது வெற்றி பெறும். புலமைக்கு முக்கியத்துவம் தராமல் எளிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மொழிபெயர்க்கப்படும் சொல் காலம் கடந்தும் நிற்கும்.
பை-சைக்கிளும்-மிதிவண்டியும்: பை-சைக்கிள் என்ற சொல்லுக்கு தமிழறிஞர்கள் கண்டுபிடித்துக் கொடுத்த சொல் ஈருருளி என்பதாகும். ஆனால் மிதிவண்டி என்ற சொல்லே வென்றது. காபி என்ற சொல்லுக்கு குளம்பி என்ற சொல்லை தேவநேயப் பாவாணர் கண்டுபிடித்தார். இந்தச் சொல் கஃபைன் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. கஃபைன் என்ற அந்த வேர்ச்சொல் குதிரையின் குளம்பைக் குறிக்கும்.
காபிக் கொட்டையைத் திருப்பிப் பார்த்தால் குதிரையின் குளம்பு போல் இருக்கும். ஆனால் அந்தச் சொல் மக்களிடம் எடுபட்டதா என்பதை யோசிக்க வேண்டும்.
கலைச் சொல்லாக்கத்தில் சாமானியர்களும் பங்கு பெற வேண்டும். அப்போது அந்த இயக்கம் முழுமை பெறும். புதிய கலைச்சொற்கள் தமிழுக்கு வரும்போதுதான் தமிழ் என்றும் உயிர்ப்போடு இருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இந்தக் காலத்தில் புதிய கலைச்சொற்கள் வளர வேண்டும்.
இந்திய மொழிகளில் ஆங்கிலச் சொல் வந்தால், அதற்கு இணையான சொல் தாய்மொழியில் கொண்டுவருவதற்கு மிக தீவிரம் காட்டும் ஒரே இனம் தமிழ் இனம்தான். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும் நிலையில், கலைச்சொல்லாக்கம் என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. தமிழை உயிர்ப்போடு வைத்திருக்கும் அதிகாரமாகும்.
இதற்காக புதிய முயற்சிகள் கண்டிப்பாகத் தேவை. இதன்படி, முதல் முயற்சியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 10,000 கட்டுரைகள் கொண்ட ஒரு கலைக்களஞ்சியம்
உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இந்த முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயரிங் ஆகிய 3 துறைகளிலும் தமிழ் வழிக்கற்றல் உள்ளது.
ஆனால் பாடத் திட்டங்கள் முழுமையாக, தரமானதாக இல்லை. அதற்கான முயற்சியிலும் இறங்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் குழு உறுப்பினர் மூ.இராசாராம், ஒளவை அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், கண்காணிப்பாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பழந்தமிழர் வாழ்வியல் கூடத்துக்கு வளரி எனப்படும் பூமராங் கருவியை கோ.விசயராகவனிடம் வழங்கிய தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வுக்குழு உறுப்பினர் மூ.இராசாராம். உடன் த.உதயச்சந்திரன், வி.ஜி.சந்தோஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.