
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதியதில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கோயில் தெருவைச் சேர்ந்த முனிக்கண்ணன் மனைவி கோட்டீஸ்வரி (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கோட்டீஸ்வரி, தனது பேத்தி வர்ஷினியை (11 மாதம்) தூக்கிக் கொண்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து -பெங்களூரு நோக்கி சென்ற கோட்டீஸ்வரி மீது மோதியது. இதில் குழந்தையுடன் கோட்டீஸ்வரி தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் குழந்தை வர்ஷினியும் இறந்தது.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ராஜசேகர் (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கு நிற்காமல் தப்பிச் சென்ற காரை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒப்பந்தவாடி அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுரேஷை பிடித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.