

மத்திய அரசு ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் ரூ. 30 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. ஏறத்தாழ 500 விசைப்படகுகளிலும், 5,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
கடந்த 8-ஆம் தேதி இரவு முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால், மறுநாளில் (நவ.9) இருந்தே தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முடக்கத்தை சந்தித்து வருகிறது. நாட்டுப்படகுகளைவிட தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஒரு படகில் 8 முதல் 10 பேர் வரை மீன்டிபிடிக்கச் செல்வர். தினமும் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதன்படி, விசைப்படகுகள் மூலமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு பிடித்து வரப்படும் மீன்களை வாங்குவதற்கு கேரள மாநிலம் மற்றும் செங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வியாபாரிகளும், மாவட்டத்திலுள்ள உள்ளூர் வியாபாரிகளும் அதிகளவில் வருவது உண்டு.
தினமும் இரவு 9 முதல் அதிகாலை 3 மணி வரை பரபரப்புடன் காணப்படும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரையிலான மீன் விற்பனை நடைபெறுவது உண்டு.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை இறக்குவதற்கு தனி தொழிலாளர்களும், அதை விற்பனை செய்ய வட்டக்காரர்கள் என அழைக்கப்படும் வியாபாரிகளும் ஈடுபடுவர். ஆனால் கடந்த இரண்டு வாரமாக விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதால் மீன்பிடி தொழில் முடங்கி மீன் விற்பனை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுவரை சுமார் ரூ. 30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்துறை அதிகாரிகளும், விசைப்படகு உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
ஒரு விசைப்படகு கடலுக்குச் சென்று மீன்பிடித்து வர டீசல், மீனவர்களுக்கான கூலி என ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகிறது. மாதத்துக்கு 1,500 லிட்டர் டீசல் மட்டுமே அரசு மானியமாக கிடைக்கிறது. இந்த டீசல் இரண்டு நாள்களுக்குள் தீர்ந்துவிடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
25,000 பேர் வேலை இழப்பு இதுகுறித்து விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் ஜான்சன் கூறியதாவது:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் பிடித்துவரும் மீன்களுக்கு வியாபாரிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே அளித்து வருவதால் அதை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், 15 நாள்களுக்கும் மேலாக படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ஏற்கெனவே, தடைக்காலம் என்ற பெயரில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க அரசு அனுமதிப்பது கிடையாது. தற்போது இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுதொடர்பாக மீன்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை அதிகளவு மீன்கள் கிடைப்பதில்லை என்பதால் குறைவான படகுகளே கடலுக்குச் செல்லும். தற்போது, ரூபாய் நோட்டு பிரச்னை வேறு நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர். இதனால், மீன்பிடி துறைமுகம் பல நாள்களாக வெறிச்சோடிக் காணப்படுகின்றது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.