
சென்னை: சென்னையில் உள்ள கல்லறைத் தோட்டங்கள் அனைத்தும் போதிய இட வசதி இல்லாமல் டெட் என்டில் இருப்பதால், கிறிஸ்தவ சமுதாயம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
சென்னையில் உள்ள ஏராளமான கல்லறைத் தோட்டங்கள் இட வசதியின்மை காரணமாக ஏற்கனவே இடத்தை பதிவு செய்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இடமில்லை என்று உடல்களை புதைக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதேப்போன்ற சூழ்நிலையில்தான், சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம், கடந்த 2007ம் ஆண்டே பல அடுக்கு கல்லறைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால், 8 ஆண்டுகளில், இந்த முறையிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.
உடனடியாக சென்னை மாநகராட்சியிடம், கல்லறைத் தோட்டத்தை புதுப்பிக்க அனுமதி கேட்டது. ஆனால், ஒரு கல்லறையை புதுப்பிக்க சுமார் 13 ஆண்டுகள் அவகாசம் வேண்டும். அந்த வகையில் இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது 2020ல் மட்டுமே கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தை புதுப்பிக்க முடியும்.
இதே காரணத்துக்காக 11 ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் இடமின்றி மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது காசிமேடு கல்லறைத் தோட்டத்தில் மட்டுமே 5 ஏக்கர் இடமிருப்பதாகவும், இதில் 150 -200 உடல்களை புதைக்க முடியும் என்றாலும், அதுவும் இன்னும் ஒரு சில மாதங்களில் நிரம்பி விடும் என்பதால், மிகப்பெரிய இடப்பற்றாக்குறையை கிறிஸ்தவ சமுதாய மக்கள் விரைவில் எதிர்நோக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.