சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் 2,888 மரங்கள்!

பெரம்பலூர்- மானாமதுரை சாலை விரிவாக்கப் பணிகளால் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள அதேநேரத்தில்...
பெரம்பலூர்- அரியலூர் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட மரம்.
பெரம்பலூர்- அரியலூர் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட மரம்.
Updated on
1 min read

பெரம்பலூர்- மானாமதுரை சாலை விரிவாக்கப் பணிகளால் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள அதேநேரத்தில், சாலையோரங்களிலுள்ள 2,888 மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளதால் சமூக ஆர்வலர்கள் வேதனையில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவிலான கல் குவாரிகளாலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளாலும் பெரம்பலூர்- அரியலூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மேலும், பெரம்பலூர்- அரியலூர்- தஞ்சை சாலையில் அதிகளவில் சாலை விபத்துகள் நிகழ்வதைத் தவிர்க்க, இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 66.2 கி.மீ. நீளமுள்ள பெரம்பலூர்- அரியலூர்- தஞ்சை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக ரூ. 157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்தச் சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டு, 7 மீட்டர் அகலம் உள்ள சாலையை 10 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர்- தஞ்சாவூர் சாலையில் சிறு பாலங்கள், குழாய்ப் பாலங்கள் என 46 பாலங்களும், சாலைகள் உயர்த்தப்படும் 15 இடங்களில் பாதுகாப்பான தடுப்புச் சுவர்களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், இந்தச் சாலையோரங்களில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் 914, அரியலூர் மாவட்ட எல்லைக்குள் 1,437, தஞ்சை மாவட்ட எல்லைக்குள் 737 மரங்கள் என மொத்தம் 2,888 மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சாலையோர மரங்கள் அனைத்தும், இயந்திரங்கள் மூலமாக வெட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன. இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் செய்யப்படுவதைப் போல, மரங்களின் கிளைகளை அகற்றி மரத்தை மட்டும் வேருடன் பிடுங்கி சாலையின் அகலத்திற்கேற்றாற் போல நட்டு வளர்த்தால், பணி முடியும் காலங்களில் சாலைகளின் இருபுறங்களும் சோலைகளாகக் காட்சியளிக்கும்.

தமிழகத்தில், தனியார் நிறுவனத்தினர் இந்த உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளின் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, தமிழக அரசும், தனியார் நிறுவனங்களும் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன. இதேபோல, நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு அகற்றப்படும் மரங்களை மீண்டும் நட்டு வைத்தால், கால விரயத்தையும், பண விரயத்தையும் சேமிக்கலாம்.

ஒரு வழிச் சாலையை தங்க நாற்கரச் சாலையாக மாற்றம் செய்த போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.

தற்போது, இந்த வழித்தடத்தில் வைக்கப்பட்ட ஒரு சில மரக்கன்றுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெரம்பலூர்- தஞ்சை சாலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

எனவே, அகற்றப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி அவற்றை மீண்டும் சாலையோரங்களில் நட்டு வைத்துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் கூடுதலாக மரக்கன்றுகள் நட்டுவைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com