
பவித்திரம் அச்சப்பன் கோவில் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பவித்திரம் கிராமத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த அச்சப்பன் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று திருவிழா நடப்பது வழக்கம். சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வர்.
இரண்டு நாள்கள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்வாக முதல் நாளான்று பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் பங்கேற்பர்.
அவ்வாறு பங்கேற்கும் பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் கைகளை மேலே உயர்த்தியபடி முழங்காலிட்டிருப்பர். அவர்களை கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபரும் பிரம்மாண்டமான சாட்டையால் அடிப்பர். அவ்வாறு பூசாரி அடிக்கும் சமயத்தில் உடலில் இருந்து தீய சக்திகள் வெளியேறிவிடும். மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
அதன்படி, நிகழாண்டுக்கான கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் முழங்காலிட்டபடி கைகளை மேலே உயர்த்தி இருந்தனர்.
அப்போது ஆளுயர சாட்டையை ஏந்திவந்த கோயில் பூசாரி மற்றும் கோமாளி பக்தர்களின் கைகளில் சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒருசிலர் ஓர் அடியுடன் எழுந்து சென்றனர். ஒரு சிலர் சாட்டையால் பல அடிகள் வாங்கிய பின்னரே எழுந்தனர்.
அதைத் தொடர்ந்து, கிடா விரட்டும் நிகழ்ச்சி மற்றும் சேர்வை நடனமும் நடைபெற்றது. தாளத்திற்கு ஏற்றாற்போல் கோமாளி மற்றும் பூசாரிகளும் நடனமாடினர்.
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் அச்சப்பன் கோயிலில் விழா நடக்கும். இந்த விழா குரும்பர் இன மக்களால் நடத்தப்படுகிறது. எனினும், அனைத்து தரப்பினவினரும் ஜாதி, மத பேதமன்றி விழாவில் பங்கேற்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக பேய் விரட்டுதல் நடக்கும். கெட்ட ஆவி பிடித்த மக்கள் அதை உடலில் இருந்து விரட்ட சுவாமியை வேண்டி, இதில் பங்கேற்பர். அதுபோல், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம், திருமணம் வரம் வேண்டியும் சுவாமியை வழிபட்டு இதில் பங்கேற்பர். பூசாரி தனது சாட்டையால் அடித்து உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டுவார். ஒரு நாள் மட்டும் பேய் விரட்டும் நிகழ்வு நடக்கும். மறுநாள் கோயில் வளாகத்தில் பழங்கால வழக்கப்படி கிடா விருந்து நடைபெறும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.