ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 10 பேர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் அருகே ஊராட்சித் தலைவர் தங்கராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on
Updated on
1 min read


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஊராட்சித் தலைவர் தங்கராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூரை அடுத்த மேல்மணம்பேடு ஊராட்சியை சேர்ந்தவர் தங்கராஜ் (49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இவருக்கு நிறைமதி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

மேல்மணம்பேடு ஊராட்சி தற்போதுள்ள தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதால் இம்முறை அவரது மனைவி நிறைமதி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, கடந்த 14-ம் தேதி காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது, 8 பேர் கொண்ட கும்பல், தங்கராஜை வழிமறித்து, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தங்கராஜின் உறவினர் நித்தியானந்தம் கொடுத்த புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன்கள் ராஜேஷ் (30), தினேஷ் (24) மற்றும் இவர்களது நண்பர்கள் கணேசன் (30), வீரா (23), மாரிமுத்து (24), அஜய் (23), சரவணன் (31), சசிதரன் (21), விபின் (20), தேவராஜ் (64) ஆகியோருக்கு தொடர்புள்ளது என தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரித்தபோது: 15 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி ராஜேஷின் தந்தை மனோகரனை, தங்கராஜ் வெட்டி கொலை செய்தார். மேலும், அவரது தாய் ராஜம்மாளுக்கும் கொலை மிரட்டல் விடுத்து, வழக்கிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

எனது தந்தைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தையும் மிரட்டி அபகரித்துக் கொண்டார். இதில் பழி உணர்ச்சியாக இருந்த ராஜேஷும், அவரது தம்பி தினேஷும் சந்தர்பத்திற்காக காத்திருந்தனர். மேலும், இதே பகுதியைச் சேர்ந்த சரவணன், தேவராஜ் ஆகியோரும் தங்கராஜால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுடன் இணைந்து பழிக்கு பழியாக தங்கராஜை, கடந்த 14ம் தேதி காலை நண்பர்களுடன் சேர்ந்து, கொலை செய்தது தெரிய வந்தது.  

இதையடுத்து ராஜேஷ், அவரது தம்பி தினேஷ் உட்பட 10 பேரையும், திங்கள்கிழமை காலை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com