"பறக்கும்' வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி!

தமிழகத்தில் நெடுஞ்சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, அதிவேக வாகனங்களை நவீன கருவி மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
"பறக்கும்' வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி!

தமிழகத்தில் நெடுஞ்சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, அதிவேக வாகனங்களை நவீன கருவி மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளில்தான் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நமது நாட்டில் சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கு 17 விபத்துகளும், தினமும் 400 விபத்துகளும் சராசரியாக நிகழ்கின்றன. இதன்படி, ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். இவர்களில் 15- 35 வயதுக்கு உள்பட்டோரே அதிகம்.
வாகனத்தின் அதிவேகத்தால் 47.9 சதவீதமும், அலட்சியம், முந்திச் செல்லுதல் போன்றவற்றால் 41 சதவீதமும், போதை காரணமாக 2.6 சதவீதமும் விபத்துகள் நேரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.


சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்: சாலை விபத்துகளில் முதலிடம் தமிழகத்துக்குத்தான். நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 69,000 சாலை விபத்துகள் வரை நிகழ்ந்துள்ளன. இவற்றில், 15,190 பேர் வரை இறந்துள்ளனர். 14 சதவீத விபத்துகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன.


நெடுஞ்சாலை வாகன விபத்துகளில் பெரும்பாலானவை அதிவேகம் காரணமாக நிகழ்கின்றன. எனவே, தமிழகத்தில் அதிவேக வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகளைக் கொண்ட மாவட்டங்களில், வட்டாரப் போக்குவரத்துத் துறையினருக்கு, வாகனங்களின் வேகத்தைக் கணக்கிட "ஸ்பீடு ரேடார் கன்' என்னும் மின்னணு கருவியை மாநில அரசு அண்மையில் வழங்கியது.


நெடுஞ்சாலையோரம் இந்த அளவீட்டுக் கருவியை வைத்தால், அந்த நேரத்தில் சாலையில் செல்லும் வாகனம், அதன் வேகம், பதிவெண் போன்றவற்றை புகைப்படத்துடன் அது காண்பித்து விடுகிறது.


மேலும், குறிப்பிட்ட வாகனத்தின் வேகத்தைத் தெரிந்துகொள்ள பொத்தானை அழுத்தினால், அந்தச் சாதனத்தில் பிரின்ட்-அவுட்டுடன் வேகம், விதிமீறல், வாகனத்தின் விவரங்கள் போன்றவை, கையில் அடுத்த நொடியில் கிடைத்துவிடும்.


இந்தத் தகவலை, அடுத்த சில கிலோ மீட்டர்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தெரிவித்து, குறிப்பிட்ட வாகனத்துக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் இதற்கான விதிமுறைகளும், எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், தமிழகத்தில் நீண்ட தொலைவு தேசிய நெடுஞ்சாலை கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினருக்கு இந்த நவீனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வாகனங்களின் வேகத்தை அளவிட்டு, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:


விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் பகுதிகள் மற்றும் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு "ஸ்பீடு ரேடார் கன்' கருவி வழங்கப்பட்டுள்ளது. சேவைக்கேற்ப ரூ. 4.5 லட்சம்- ரூ. 8.5 லட்சம் வரை இந்தக் கருவி வாங்கப்பட்டுள்ளது. விதிகளின்படி இந்தச் சாதனத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள வேகத்தின் அளவை, சாலையில் செல்லும் வாகனம் மீறினால் அந்தக் கருவி, பீப் என்று ஒலி எழுப்பி, வாகனத்தின் வேகத்தை குறிப்பிட்டுவிடும். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் அவர்.


80 கி.மீ. வேகத்தை மீறினால் அபராதம்: போக்குவரத்துத் துறை அறிவுறுத்தலின்படி, பேருந்து, லாரி, டிரக், வேன், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை அதிகப்பட்சமாக 80 கி.மீ. வேகத்தில் இயக்கலாம். கார், சொகுசு வாகனங்களை அதிகப்பட்சமாக 100 கி.மீ. வேகத்தில் இயக்கலாம்.


ஆட்டோ, பள்ளி வாகனங்கள் போன்றவற்றை அதிகப்பட்சமாக 60 கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும். இதை மீறி அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்ட விதிகள்படி (பிரிவு 183(1)) முதல் கட்டமாக ரூ. 400 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே வாகன ஓட்டி இரண்டாவது முறையாக அதிவேகமாக வந்தால் (பிரிவு 184) ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com