காவிரி கைவிட்டதால் தண்ணீரின்றி வாடும் 45 ஆயிரம் ஹெக்டேர் வாழை: பரிதவிப்பில் விவசாயிகள்

காவிரியில் தண்ணீர் வராததால், சுமார் 45 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர் காய்ந்து
காவிரி கைவிட்டதால் தண்ணீரின்றி வாடும் 45 ஆயிரம் ஹெக்டேர் வாழை: பரிதவிப்பில் விவசாயிகள்
Updated on
2 min read

நாமக்கல்: காவிரியில் தண்ணீர் வராததால், சுமார் 45 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர் காய்ந்து வருகிறது. இந்தப் பயிரைக் காப்பாற்ற மாற்று தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கவும், இழப்புக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 தமிழகத்தில் ஏறத்தாழ 1.8 லட்சம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில் காவிரி பாயும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் 18 ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களில் 45 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை சுமார் 20 நாள்கள் வரை செயல்படவில்லை. இதனால் அங்கு தினமும் விற்பனையாகும் 800 டன் வாழை, வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
 மேலும் மழை காரணமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வாழை அறுவடைக்கு வந்துவிட்டது. மழையால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சந்தைகள் ஒரு மாதம் வரை செயல்படாதது மற்றும் பண்டிகை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரவேண்டிய வாழை, முன்கூட்டியே அறுவடைக்கு வந்தது போன்ற காரணங்களினால் வாழை கிலோ ரூ. 2 முதல் ரூ. 5 வரை வீழ்ச்சி அடைந்தது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
 ஆனால், கடந்த 3 மாதங்களாக அனைத்து வாழை ரகங்களும் விலை உயர்ந்து கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனையாகின்றன. இதற்கு காரணம் வழக்கமாக ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் வாழை அறுவடை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். நிகழாண்டு வாழை அறுவடை மார்ச் மாதத்திலேயே முடிந்துவிட்டதுதான்.
விலை உயர்வால் வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு: கடந்த 3 மாதங்களாக விலை உயர்ந்துவரும் நிலையில், நிகழாண்டில் காவிரி பாசனப் பகுதியில் புதிதாக வாழை நடவும், மறு கட்டை விடுவதும் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், வாழைப் பயிர் காய்ந்து விடும் நிலையில் உள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஜி.அஜீத்தன் கூறியதாவது:
 காவரி பாசனத்தை நம்பி வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், இப்போது கடுமையான நெருக்கடியில் உள்ளனர். பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், வாழைப் பயிர் காய்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால், தாற்காலிகமாக வாழைப் பயிரைக் காப்பாற்றி வைத்துள்ளது.
 ஹெக்டேருக்கு ரூ. 75 ஆயிரம் வரை செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், பயிரைக் காப்பாற்ற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் வாழைப் பயிரை காப்பற்ற மேற்கொள்ள வேண்டிய மாற்று தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்க வேண்டும்.
 மேலும் ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் காவிரி பாசன விவசாயிகளின் பாரம்பரிய பயிரான வாழைப் பயிர் இப்போது காவிரியில் தண்ணீர் வராததால் பாதிப்படைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கடந்த சில ஆண்டுளாக கல்லணையின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு அறிவிககப்பட்டு வரும் குறுவை, சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டங்கள் போன்று வாழைப் பயிர் செய்துள்ள விவசாயிகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை அறிவிக்கவும் அரசு முன்வர வேண்டும். இதுபோல், வாழை விளையும் பகுதிகளில் சிப்பம் கட்டும் கூடம், ஏற்றுமதி கட்டமைப்பு வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com