
காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரை தர மறுத்து கர்நாடகத்தில் பல்வேறு அமைப்புகள் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி முழு அளவு தண்ணீரைத் தராதபோதே தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் மறியல், கடையடைப்புப் போராட்டங்களை நடத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு தர வேண்டும்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு முழு அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கேரள அரசால் அணை கட்ட முடியாது. புதிய அணை கட்டுவதற்கு தமிழக பாஜக தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் என்றார்.
மத்திய அரசு தீர்வு காண வேண்டும்
காவிரி நீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
தருமபுரியில், அந்தக் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் தமிழகம் தனது உரிமையை இழந்து கையேந்தி நிற்கும் நிலையில் உள்ளது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு மற்றும் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என கர்நாடகம் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு ஏமாற்றம் தொடர்கிறது. காவிரி பிரச்னை நீண்ட காலம் தீர்க்கப்படாமல் உள்ளதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில், காவிரி விவகாரத்தில் அந்த மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. ஆனால், காவிரியில் உரிமையை இழந்து நிற்கும் தமிழகத்தில், ஒன்றுபட்டு குரல் கொடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் மனமாச்சரியங்களை மறந்து தமிழக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரை நேரில் சந்தித்து இப் பிரச்னைக்கு தீர்வு காண உரிய அழுத்தம் தர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாமக வெற்றிபெறும் என்றார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.
அந்தக் கட்சி சார்பில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி நதி நீர் பிரச்னை குறித்து விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவும், அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசு செயல்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
வேதங்கள், இந்துத்துவக் கொள்கையைத் திணிப்பதாக உள்ளது. உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. புதிய கல்விக் கொள்கையைக் கைவிட்டு, கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.