திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கர்நாடக மாநில அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது.
அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 76.74 அடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணையின் வலதுகரை பகுதி.
அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 76.74 அடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணையின் வலதுகரை பகுதி.
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநில அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணைப் பாசனம் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறுவை, சம்பா, தாளடி பயிர்களின் பாசனத்துக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து பாசனத்துக்கான நீர்த் தேவை குறையும். நடப்பு நீர்ப் பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் போதுமானதாக இல்லாததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கர்நாடகம் உடனடியாக தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன்பேரில், உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி கர்நாடக அரசு, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டது.
இந்தத் தண்ணீர் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர்வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 3,091 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7,905 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததால், வியாழக்கிழமை காலை 76.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 76.74 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 38.78 டி.எம்.சி.யாக இருந்தது. கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், விரைவில் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com