
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து வெள்ளிக்கிழமை மாலை புழல் சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பண மோசடி செய்த வழக்கில், கடந்த 26 -ஆம் தேதி போலீசாரால் பச்சமுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இவரது ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவருக்கு நிபந்தனைகளுடன்கூடிய ஜாமீனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, ரூ.75 கோடிக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கான ரசீது, பச்சமுத்துவின் பாஸ்போர்ட் உள்ளிட்டவை சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மேலும் சிவக்குமார், காமராஜ் ஆகிய இருவரும் தலா 10 லட்சம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தியது தொடர்பாக, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை அவர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை நிபந்தனை ஜாமீனில் பச்சமுத்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன்பாக பச்சமுத்து சனிக்கிழமை (செப்.10) முதல் நேரில் ஆஜராகி கையெழுத்திடுவார் என்று அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.