

சென்னை- காரைக்கால் துறைமுகங்களுக்கிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
காரைக்கால் துறைமுகத்தில் 5 கப்பல்களை நிறுத்தும் வகையில் "பெர்த்' அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால் துறைமுகங்களுக்கு வெளிநாட்டு சரக்குக் கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த இரண்டு துறைமுகங்களுக்கும் இடையே ஏறக்குறைய 310 கி.மீ. தொலைவு உள்ளது.
தற்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையும், நாகப்பட்டினம் வரையுள்ள 45-ஏ குறுகிய இருவழி நெடுஞ்சாலையும் அபாயகரமான வளைவுகளை அதிகம் கொண்டுள்ளன. இதனால், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்துக்கு இந்த இரு சாலைகளாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. அடிக்கடி விபத்துகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.
எனவே, பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினால் சாலை வழிப் போக்குவரத்தில் நெரிசல் குறைந்து, விபத்துகள் கட்டுப்படுத்தப்படும்.
கடல்வழிப் போக்குவரத்து: சென்னை- வேளாங்கண்ணிக்கு இடையே புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் சென்னை, காரைக்கால் துறைமுகங்கள் பெரிய துறைமுகங்களாகும். மற்றவை சிறிய துறைமுகங்களாக உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. பின்னர் என்ன காரணத்தினாலோ அது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை- நாகப்பட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், அதற்கு அரசு ஒத்துழைப்பு தரத் தயார் என வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்தது. அப்போது, காரைக்காலில் பெரிய துறைமுகம் அமையாததால் இதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை.
ஆனால், தற்போது காரைக்கால் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டு, மாதத்துக்கு 30 முதல் 40 பெரிய கப்பல்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த வழித்தடத்தில் காரைக்கால் முதல் சென்னை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சிரமம் இருக்காது.
எர்ணாகுளம்- லட்சத்தீவுகளுக்கு இடையே சிறிய கப்பல் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், சென்னை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது சாத்தியமே. இதன்மூலம் வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, அந்தப் பகுதிகள் மேலும் வளர்ச்சி பெறுவது மட்டுமன்றி, சாலை விபத்துகளும் பெருமளவு தவிர்க்கப்படும்.
எனவே, காரைக்கால்- சென்னை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.