நீர்த்தேக்கத்துக்காக 50 ஆண்டுகளாக போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு...
நீர்த்தேக்கத்துக்காக 50 ஆண்டுகளாக போராட்டம்
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனப் பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்துகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மளையாளப்பட்டி பகுதியில் உள்ளது சின்னமுட்லு. இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தின் மூன்று பக்கமும் மலையால் சூழ்ந்துள்ள இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெருக்கெடுத்தோடும் மழைநீரைச் சேமித்து வைத்தால் கோடைக் காலங்களில் விவசாயப் பணிக்கும், குடிநீர்த் தேவைக்கும் அது பயன்படும்.

மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து கொட்டும் அருவியானது, எட்டெருமை பாலி எனப்படுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களும் பச்சைமலைப் பகுதியில் மிகுதியாகப் பொழியும் மழை நீரானது, எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் வெள்ள நீராகப் பெருக்கெடுத்து, அரும்பாலூர் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியதுபோக, எஞ்சிய மழைநீர் அனைத்தும் கல்லாற்றின் வழியே கரைபுரண்டோடி, கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.

எனவே, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப் பயனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழைநீரைச் சேமிக்க, சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் 50 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு வந்தது இந்தத் திட்டம்.
இந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பொதுப் பணித் துறை, வருவாய்த் துறையினர் நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, திட்டத்தைச் செயல்படுத்திட ரூ. 9 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தனர்.

பின்னர், கடந்த 2005- 06-ல் மீண்டும் தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 11 கோடியாக உயர்த்தி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதி கோரியது.

இதனிடையே, முறையாக நீர் ஆதாரம், மண்ணின் தன்மை, பொதுமக்களின் கருத்துக் கேட்பு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், எந்த விளக்கமும் அளிக்காமல் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக கடந்த 2013-ல் தமிழக அரசு அறிவித்தது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அந்தப் பகுதி மக்களிடையே ஆதரவு வலுத்து வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் மேம்படும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இதுவிஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com