சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் முனு ஆதி

தமிழக சட்டப் பேரவை பதவிப் பொறுப்பை சிறப்பாகக் கையாண்டு பேரவைத் தலைவர் பதவிக்குப் பெருமை சேர்த்தவர் முனு ஆதி என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் முனு ஆதி
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவை பதவிப் பொறுப்பை சிறப்பாகக் கையாண்டு பேரவைத் தலைவர் பதவிக்குப் பெருமை சேர்த்தவர் முனு ஆதி என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் மறைந்த முனு ஆதியின் 90-ஆவது பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா தாம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிறந்த நாள் மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் பெற்றுகொண்டார்.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, முனு ஆதியை சட்டப் பேரவைத் தலைவராக அமர வைத்தார். இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு அவரது திருவுருவப்படத்தைத் திறந்துவைத்து, பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிடக் கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகின்றேன்.
முனு ஆதி, ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்து, தாம்பரத்துக்கு வருகை தந்த காந்தியடிகளிடம் நிதி வழங்கியவர். பின்னர், சோஷலிஸ்டு கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து, மும்முனைப் போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, சிறையில் இருந்து திமுக தொண்டனாக வெளியே வந்தார்.
தாம்பரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தனது கடும் உழைப்பினால் உயர்ந்து 4 முறை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக சட்டப் பேரவைத் தலைவராக உயர்ந்தவர். அண்ணா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்றார் அவர்.
விழாவில் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரிஅனந்தன், ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளிச் செயலர் கே.நாராயணராவ், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com