சூட்கேஸ் கொடுத்து அதிமுக என்னை இழுக்க அவசியம் இல்லை: பொன்னுப்பாண்டியன்

கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட அதிமுக என்னும் பேரியக்கம், சாதாரண எம்.எல்.ஏ.வான என்னை சூட்கேஸ் கொடுத்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லை...
சூட்கேஸ் கொடுத்து அதிமுக என்னை இழுக்க அவசியம் இல்லை: பொன்னுப்பாண்டியன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட அதிமுக என்னும் பேரியக்கம், சாதாரண எம்.எல்.ஏ.வான என்னை சூட்கேஸ் கொடுத்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அதிமுகவில் முதல்வர் முன்னிலையில் சமீபத்தில் இணைந்த தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் பிள்ளையார்நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.மாவட்டப் பொருளாளர் மல்லி எஸ்.ஆர்.ராஜவர்மன் வரவேற்றார்.

இந்திய கமயூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் முதல் முதலாக அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட ஒரு பேரியக்கம். இதில் மாற்றுக் கட்சியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.வான நான் வந்து சேர்ந்ததால், அதிமுகவிற்கு பெரிய பலம் ஒன்றும் இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து, முழு நேரமும் தமிழகம் மற்றும் இங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்காவும் வாழ்ந்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சிக்கு நான் என்றும் விசுவாசமாக இருப்பேன்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக வியூகம் வகுத்து செயல்படுவேன். ஏராளமான மாற்றுக் கட்சித் தொண்டர்கள் நாங்களும் அதிமுகவிற்கு வருகிறோம் என்று புதியதாக இணைய வந்துள்ளார்கள். எந்த மேடையில் எப்படி பேச வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கூறுகிறார்களோ, அதன்படி அதிமுகவிற்கு ஏற்றவாறு என் நடவடிக்கையை மாற்றிக் கொள்வேன் என்றார் அவர். மேலும் பொன்னுப்பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கூறியதாவது:

இங்கு வேட்பாளராக உள்ளவர் கருவிலேயே அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். தலைமைக்கு விசுவாசமான குடும்பத்தில் உள்ளவர். ஒரு வால்போஸ்ட் ஒட்டும் தொண்டனாக இருந்த என்னை வரலாறு பேசும் அளவிற்கு உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலலிதா. உண்மையாய், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அதிமுகவில் வெற்றி தானே தேடி வரும் என்றார் அவர்.மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம் பேசுகையில் கூறியதாவது: தொண்டர்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பாசத்தோடு சகிப்புத் தன்மையோடு ஒரே குறிக்கோள் 234 தொதிகளும் அதிமுக வெற்றி என்ற குறிக்கோளுடன் உழைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிடும் சந்திரபிரபா, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், கட்சியின் வழக்குரைஞர்கள் அ.மங்களசாமி, எம்.ஜெகதீசன், முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.டி.கந்தசாமி, அ.மகேஸ்வரன், பா.அங்குராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com