
ஒருவர், தனது துறையில் உச்சத்தில் இருக்கும்போது விடை பெறுவதே அவரது வெற்றிக்கு அடையாளம் என்றார் மூத்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்.
தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், ஆந்திர-தெலங்கானா மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனுக்கு வெள்ளிக்கிழமை பிரிவுபசார விழா நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பிரபாகரன் வரவேற்று பேசினார். மூத்த வழக்குரைஞர்கள் ஏ.எல்.சோமையாஜி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.சுப்பிரமணியன், ஆர்.காந்தி, ஆர்.சண்முகசுந்தரம், பி.வில்சன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
நான், பணியிடம் மாறுதலாகி செல்வதற்கு அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். பெரும்பாலான வழக்குரைஞர்கள் வேறு இடத்துக்கு மாறுதலாகிச் செல்ல வேண்டாம் என கையெழுத்திட்டு மனு அளித்தனர்.
""யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்பதன் அடிப்படையில்தான் நான் இடம் மாறுதலாகிச் செல்கிறேன். ஒரு நல்ல பேச்சாளனுக்கு அடையாளம், இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா என நினைக்கும் போதே பேச்சை நிறுத்திக் கொள்வதாகும்.
அதேபோல், ஒரு நல்ல நடிகனுக்கு அடையாளம், இன்னும் 10 பட வாய்ப்புகள் இருக்கும்போதே விலகிக் கொள்வது. இவற்றைப் போலவே, உங்கள் வெற்றி என்பது நீங்கள் எப்போது விடை பெறுகிறீர்கள் என்பதைப் பொருத்து அமைகிறது. நாம் இந்த ரகசியத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அனைவரும் என் மீது செலுத்தும் அன்புக்கு நான், கடன் பட்டவன் என்றார் மூத்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்.
விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தமிழ்நாடு பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி, பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் வி.நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.