
பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால், தமிழகத்தை 100 ஆண்டுகளானாலும் மாற்ற முடியாது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
திருச்சி தென்னூர் அண்ணா நகர்-பாரதி நகரில் மேற்குத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.ஜோசப் ஜெரால்டுவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் இன்று நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவும், திமுகவும்தான் காரணம். வேறு யார் மீதும் குறை சொல்ல முடியாது. மக்களுக்கு சிகிச்சையளிக்க நல்ல மருத்துவமனைகள் இல்லை, அடிப்படை வசதிகள்கூட இல்லை. திருச்சியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலை உள்ளது.
தமிழகத்தில் இன்று என்ன இருக்கு என்று கேட்டால், டாஸ்மாக்தான் தெருவுக்குத் தெரு இருக்கிறது என்று பதில் வருகிறது. நாளைய தமிழகத்தை ஆளக்கூடிய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் எஜமானர்கள் நீங்கள்தான். அதற்கேற்றவகையில், மாற்றத்தைக் கொண்டு வர சிந்தியுங்கள்.
ஓட்டுக்கு பணம்தான் அதிமுக, திமுகவால் தர முடியும். நல்ல சாலை அமைத்துத் தர முடியுமா, முறையாக ரேஷன் பொருள்களைத் தர முடியுமா, நல்ல பேருந்து வசதியைத் தர முடியுமா என பல கேள்விகள் எழுந்தாலும், அவர்களால் எதையும் செய்து தர முடியாது.
புதிய வாக்காளர்கள் ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். நாங்கள் நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவருவோம். மாற்றம் வந்தால்தான் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். தமிழகத்திலிருந்து இரு கட்சிகளையும் அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. எனவே, எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்றார் பிரேமலதா.