கவிஞர் இன்குலாப் காலமானார்

"மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்பட்ட இன்குலாப் (73), சென்னை யில் வியாழக்கிழமை (டிச.1) காலமானார்.
கவிஞர் இன்குலாப் காலமானார்

"மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்பட்ட இன்குலாப் (73), சென்னை யில் வியாழக்கிழமை (டிச.1) காலமானார்.
உடல் நலப் பாதிப்பின் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கவிஞர் இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் ஹமீது. ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களைக் கிளர்ச்சி அடையச் செய்யும் வகையிலே அவரது எழுத்துகள் இருந்தன.
ஆரம்ப காலங்களில் திமுகவின் ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளராகச் செயல்பட்டார். இன்குலாப்பின் ஒட்டுமொத்த கவிதைத் தொகுப்பான "ஒவ்வொரு புல்லையும்' என்ற நூல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அவரின் அவ்வை, மணிமேகலை நாடகங்களும் மிகுந்த வரவேற்புக்குரியவை.
"மனுசங்கடா, நாங்க மனுசங்கடா' என்ற இன்குலாப் எழுதிய பாடல், எண்ணற்ற மேடைகளில் பாடப்பட்டது. தலித் விடுதலையை உணர்த்தும் பாடலாகவும் போற்றப்பட்டது.
சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 2006 -ஆம் ஆண்டு "கலைமாமணி' விருது அவருக்கு வழங்கப்பட்டபோது, ஈழத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு காக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அந்த விருதை அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் இன்குலாப்வுக்கு, கமருன்னிசா என்ற மனைவியும், செல்வம், இன்குலாப் என்ற இரு மகன்களும், ஆமீனா பர்வீன் என்ற மகளும் உள்ளனர்.
இன்குலாப்பின் உடல் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி மதுரை மீனாட்சி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரின் உடல் சனிக்கிழமை (டிச.3) தானமாக வழங்கப்பட உள்ளது. தொடர்புக்கு-97104 52370.
தலைவர்கள் இரங்கல்
சென்னை, டிச.1: கவிஞர் இன்குலாப் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்: தமிழ்மொழி மீதான தாகத்தின் விளைவாக தன் மாணவப் பருவத்திலேயே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவர், மனித உரிமை போராளியாகத் திகழ்ந்தார். அவரது மறைவு, உழைக்கும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்பட்ட இனத்துக்கும், தமிழுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு.
ராமதாஸ் (பாமக): ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்தவர் மக்கள் பாவலர் இன்குலாப். தமிழகத்தில் இன்று புகழ்பெற்ற பாவலர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இன்குலாபுக்கு நன்றிக் கடன்பட்டிருப்பவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 2009 இல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, தனக்கு தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை அரசுக்குத் திருப்பி அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவருடைய மறைவு இலங்கைத் தமிழர் விடுதலை இயக்கத்துக்கும், சமூக நீதிப் போராட்ட இயக்கத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை சார்ந்தே படைத்தவர் கவிஞர் இன்குலாப். அவருடைய மறைவு முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை கீதமாக இசைத்துக் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: தலித் மக்களின் விடுதலைக்காக அவர் இலக்கியத்தின் வழி பங்களிப்புச் செய்தது போலவே, பெண்களின் விடுதலைக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து: இன்குலாப் என்ற கவிஞனின் பௌதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம்செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): கவிதைப் படைப்பில் தனக்கென தனி முத்திரைப் பாதையை வகுத்துக் கொண்டவர்.
இஸ்லாமியக் குடும்பத்திலே பிறந்திருந்தாலும் மதங்களைத் தாண்டி மனிதம் என்பதற்கு மரியாதை கொடுத்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com