வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு, "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு, "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம் (71). கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
மணிப்பூரி, மராத்தி, டோகிரி, மைதிலி, ஒடியா, ராஜஸ்தானி, தமிழ் ஆகிய 7 மொழிகளில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் இந்தாண்டுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இதில், தமிழில் வண்ணதாசனுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான விருதுப் பட்டியலில் அவர் இடம்பெறுவார் என எழுத்துலகில் அனைவரும் எதிபார்த்திருந்த தருணத்தில் அதை மெய்ப்பிக்கும் வகையில் சாகித்ய அகாதெமி இந்த விருதை அறிவித்துள்ளது. இவரது தந்தையும், திறனாய்வாளருமான தி.க. சிவசங்கரன், 2000இல் இந்த விருது பெற்றார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதுவும் தாமதம்தான் என்ற குரலும் இலக்கிய வட்டத்தில் எதிரொலிக்கிறது.
ஒரு சிறு இசை: 15 சிறுகதைகள் அடங்கிய "ஒரு சிறு இசை' எனும் தொகுப்பு 160 பக்கங்கள் கொண்டது. 2003இல் முதல் பதிப்பு வெளியானது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இதன் விலை ரூ. 130.
இதுதொடர்பாக, வண்ணதாசன் கூறியது: நெல்லையைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னையும் எழுதத் தூண்டியது. அந்தக் கடிதங்களை நான் பொக்கிஷமாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுகிறேன். என்னுடன், 1960-களில் எழுதத் தொடங்கிய பலரும் இப்போது எழுதுவதில்லை. இருப்பினும், இன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. தமிழில் பிரசித்தி பெற்ற படைப்பாளர்களின் படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து இன்றைய எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டும். தொடர்ந்து தாமிரவருணி சார்ந்து படைப்புலகில் இயங்குவேன் என்றார்.
வாழ்க்கை குறிப்பு: இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெற்றோர் தி.க.சிவசங்கரன் - தெய்வானை. இப்போது, 19. சிதம்பரம் நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி என்ற முகவரியில் வசித்து வருகிறார். இளநிலை வணிகவியல் பயின்றவர். 60-களில் எழுதத் தொடங்கினார். 1962 ஏப்ரல் மாதம் புதுமை இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது. 13 சிறுகதைத் தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. "எல்லோருக்கும் அன்புடன்' எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது மனைவி வள்ளி, மகள் சிவசங்கரி, மகன் நடராஜ சுப்பிரமணியம். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பெங்களூரில் வசிக்கின்றனர்.
விருது, பரிசுகள்: இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஜா வழங்கிய பாவலர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, சுஜாதா அறக்கட்டளை விருது உள்ளிட்ட விருதுகளும், பரிசுகளும் பெற்றவர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2016}ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இப்போது, சாகித்ய அகாதெமி விருதும் பெற்றுள்ளார்.
சிறுகதைத் தொகுப்புகள்: கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976), தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் (1978), சமவெளி (1983), பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985), மனுஷா, மனுஷா (1990), கனிவு (1992), நடுகை (1996), உயரப் பறத்தல் (1998), கிருஷ்ணன் வைத்த வீடு (2000), வண்ணதாசன் கதைகள் தொகுப்பு (2001), பெய்தலும், ஓய்தலும் (2007), ஒளியிலே தெரிவது (2010).
கவிதைத் தொகுப்புகள்: புலரி (1981), கல்யாண்ஜி கவிதைகள் (1987), முன்பின் (1994), அந்நியமற்ற நதி (1997), நிலா பார்த்தல் (2000), கல்யாண்ஜி முழுத் தொகுப்பு (2001), உறக்கமற்ற மழைத்துளி (2005), கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள் (2007), இன்னொரு கேலிச் சித்திரம் (2008), மணல் உள்ள ஆறு (2011).
குறுநாவல்: சின்னு முதல் சின்னு வரை (1990), கடிதத் தொகுப்பு: எல்லோருக்கும் அன்புடன் (1995), கட்டுரைத் தொகுப்பு: அகம்புறம் (2008).
'எனது எழுத்துக்கு தேசிய அங்கீகாரம்'
முதிர்ச்சியடைந்த எனது எழுத்துக்கு கிடைத்துள்ள தேசிய அங்கீகாரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
தமிழ்ப் படைப்பாளிகள் அவரவர் தளங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எனது எழுத்துகள் முதிர்ச்சியடைந்துள்ளதாக நான் நினைத்த பின்பு வெளியான "ஒரு சிறு இசை' என்ற படைப்புக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
இவ்விருதால் எனது எழுத்துக்கு தேசிய அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் இன்னும் அதிகமான வாசகர்களை எனது எழுத்துகள் சென்றடையும். என் தந்தை தி.க.சி.யைத் தொடர்ந்து எனக்கும் கிடைத்திருப்பதை பாரம்பரிய தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.
திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அடுத்தடுத்து விருதுகளைப் பெறுவதற்கு தாமிரவருணி கொண்டு சேர்த்திருக்கிற இலக்கிய ஈரமும், அழகியல் சார்ந்த உண்மை வெளிப்பாட்டுப் பதிவுகளுமே காரணமென நினைக்கிறேன். மேலும், நெல்லை சீமையின் எழுத்துகள் நீர்த்துப் போகாமல், அடர்த்தி குறையாமல் தொடர்ந்து வருவதாகவும் பார்க்கிறேன்.
தமிழில் புதிய படைப்பாளிகள் வந்துகொண்டே இருக்கின்றனர். நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் என ஏராளமானவை வெளிவருகின்றன. இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.
விருதைப் பெற்றுத் தந்துள்ள இத்தொகுப்பில் நான் சந்தித்த மனிதர்களின் நுட்பமான கொள்கைகளைப் பதிவு செய்துள்ளேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com