கச்சேரிக்கு கச்சேரி புதுமை!

வழக்கம்போல கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி. அரங்கம் நிரம்பி வழிந்தது.
கச்சேரிக்கு கச்சேரி புதுமை!

வழக்கம்போல கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி. அரங்கம் நிரம்பி வழிந்தது. வெளியூரிலிருந்து எல்லாம்கூட சுதா ரகுநாதனின் கச்சேரியைக் கேட்க அவரது ரசிகர்கள் பலர் ஆஜராகி இருந்தனர். சுதா ரகுநாதனின் சீடர்களும், சில இளைய தலைமுறைக் கலைஞர்களும் வந்திருந்தனர். சுதாவும் வழக்கத்தைவிட அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார்.
ஸ்ரீராம்குமார் வயலின், கே.வி. பிரசாத் மிருதங்கம், எஸ். கார்த்திக் கடம். அன்றைய நிகழ்ச்சியில் இவர்கள் பங்கு கணிசமானது. காரணம், சங்கீதமும் பக்கவாத்தியமும் இரண்டு தண்டவாளங்கள் போல ஒன்றுக்கொன்று சமமாக சஞ்சரித்தன.
வனஜாக்ஷி - கல்யாணி ராக அடதாள வர்ணத்துடன் தொடங்கி, விறுவிறுப்பான நாட்டையில் ஸ்வாமிநாத பரிபாலயாசுமாம். அதில் "பார்வதி சுகுமார' என்னுமிடத்தில் ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு விடஜாலதுரா நாமனஸý (ஜனரஞ்சனி).
சுதா ஆலாபனையில் இறங்கியபோது அமிருதவர்ஷிணிதான் இசைக்கிறார் என்று முதலில் தோன்றியது. பிறகுதான் "அடடா, இது மந்தாரி அல்லவா?' என்று உரைத்தது. சுதா ரகுநாதன் டாப்
ஃபார்மில் இருப்பதை அவரது ஆலாபனை வெளிப்படுத்தியது. சில இடங்களில் எம்.எல்.வி.யின் ஃப்ளாஷஸ் மின்னல் வெட்டாக வந்து போனது போல உணர்வு. ஒருவேளை அது மனப்பிரமையோ என்னவோ. அதிசய வர ப்ரசாதினி என்கிற சாகித்யம். இது ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடையது என்று நினைவு. அதில் "அதிசயவரப்ரசாதினி'யிலேயே ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு,
சுத்த தன்யாசியில் நாராயணா என்கிற சாகித்யம் (புரந்தரதாசருடையது).
விஸ்தாரமான காம்போதி ஆலாபனை. அன்றைய நிகழ்ச்சியில் ராக ஆலாபனைக்கு சுதா ரகுதநாதன் தேர்ந்தெடுத்துக் கொண்ட பிரதான ராகம் இதுதான். தெவிட்டும் அளவுக்கு காம்போதியை பரிமாறினார் என்று சொன்னால் சுதா ரகுநாதனின் ஆலாபனை தெவிட்டியது என்று அர்த்தமல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களை காம்போதியில் மூழ்கித் திளைக்க வைத்தார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஒரு வருடத்துக்கு இந்த காம்போதியை அன்று ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் கூடியிருந்த ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
காம்போதி ஆலாபனையைத் தொடர்ந்து ஓ ரங்கசாயி. சுதாவின் குரலில் அந்த சாகித்யம் புதுப் பொலிவை அடைந்தது. "பூலோக வைகுண்டம்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரம் பாடினார். அன்றைய கே.வி. பிரசாத், எஸ். கார்த்திக் இருவரின் தனியாவர்த்தனம் பற்றிச் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். லய விந்யாசம் என்பது இதுதான். ஒருத்தர்கூட எழுந்து அங்கே இங்கே போக வேண்டுமே, ஊஹூம்.
ரஞ்சனி ராகத்தில் ரஞ்சனி நிரஞ்சனி (ஜி.என்.பி.) பாடிவிட்டு ராகம், தானம், பல்லவிக்குத் தயாரானார் சுதா. எடுத்துக்கொண்ட ராகம் மத்யமாவதி. "நாராயணா உன் திருநாமத்தை சொல்ல நா இனிக்குமே கோவிந்த ஹரி முகுந்தா' என்கிற சங்கீர்ண ஜாதி த்ரிபுட தாள பல்லவி. காம்போதி ராக ஆலாபனைக்கு என்ன சொன்னோமோ அது மத்யமாவதி ஆலாபனைக்கும் பொருந்தும். நாட்டைக்குறிஞ்சி, ஹம்ஸாநந்தி, வலஜ், ரேவதி ஆகியவற்றை ராகமாலிகை ராகங்களாக கையாண்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.
சுதா ரகுநாதனின் தனிச் சிறப்பு, கச்சேரிக்கு கச்சேரி ஏதாவது புதிது புதிதாக செய்து கொண்டிருப்பது. அரைத்த மாவையே அரைப்பது, வெறும் குரல் பலத்தை மட்டுமே நம்பி இருப்பது, ஏனோ தானோ என்று திட்டமிடாமல் நிகழ்ச்சிக்கு வருவது இவையெல்லாம் சுதா ரகுநாதனுக்கு அந்நியம். இந்த ராகம், தானம், பல்லவியிலேயே பாருங்கள். சாகித்யத்தை இரண்டு கலையில் ஆரம்பித்து, ஸ்வரம் பாடும்போது ஒரு கலையில் இசைத்தது ஸ்லாகிக்கும்படியாக இருந்தது.
"பாரே பாண்டுரங்கா' (மிஸ்ர மாண்டு), "என்ன தவம் செய்தனை' (காபி), "மன்கீ ஆங்ககே கோலோ' (பஜன்), "மைத்ரீம் பஜத' என்று சில துக்கடாக்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பாடிய களைப்பு கொஞ்சமாவது இருக்க வேண்டுமே... வர்ணத்தின் போதிருந்த அதே உற்சாகத்தில்தான் "மைத்ரீம் பஜத' பாடி முடித்தபோதும் இருந்தது. அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com