
இணைய குற்றங்களால் பாதிக்கப்படுவோர், எவ்வித அலைச்சலுக்கும் ஆளாகாமல் எளிதான முறையில் புகார் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள், மேடைப் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையை தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகிறார். தமிழகக் காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி காவல்துறை செயல்பட வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் கேலி செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியது அவசியம். இணையதளங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
இணைய குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் குறிப்பாக பெண்கள், அது குறித்து புகார் செய்வதற்குச் சென்றால், வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி, மாற்றி அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே இது போன்ற குற்றங்களால் பாதிக்கப்படுவோர் காவல் துறையின் ஒரு பிரிவில் புகார் செய்தாலே, அதைப் பதிவு செய்து பல பிரிவுகளுடன் ஒருங்கிணைத்து தகவல் திரட்டி துரிதமாக நடவடிக்கை எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் சமூக வலைதளங்களால் பாதிக்கப்படுவோர் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தைரியமாக புகார் அளிக்க முன்வருவார்கள் என்றார் அவர்.