
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அவசியமில்லை என்றாலும் பாஜக பலத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவோம் என, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
மதுரை பீபீகுளத்தில் உள்ள மக்கள் சேவை மையத்தில் பண்டித தீனதயாள் உபாத்யாய இலவச சட்ட ஆலோசனை பிரிவை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்ளை விரைந்து செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசு திட்ட விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் பிரதமர் உருவப்படம் இடம் பெற வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கை மதம் சார்ந்தது என திமுக தலைவர் கருணாநிதி விமர்சிப்பது சரியல்ல. மாநில உரிமையை அந்தக் கல்விக் கொள்கை பாதிக்காது.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவிடம் உலகத்தரத்தில் அமைய பிரதமர் விரும்புகிறார். அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அவசியமில்லை. ஆனாலும், பாஜக பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தலை அணுகுவோம் என்றார்.