
இந்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிவேக வை-ஃபை வசதியைத் தொடக்கி வைத்து, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சென்ட்ரல், திருச்சி ரயில் முனையம் உள்பட நாடு முழுவதும் 19 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018-க்குள் 400 ரயில் நிலையங்களாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் வருகிற டிசம்பருக்குள் மேலும் 3 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.
3 ஆண்டுகளுக்குள் பயோ-கழிவறை: இருப்புப் பாதைகள் சேதமடைவதைத் தடுக்கவும், பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையிலும் ரயில்களில் பயோ-கழிவறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. 2016 மார்ச் வரை 35 ஆயிரம் பயோ-கழிவறைகள் உள்ளன.
2016-17ஆம் நிதியாணடில் மேலும் 30 ஆயிரம் புதிய பயோ-கழிவறைகள் ஏற்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரயில்கள் முழுவதும் பயோ-கழிவறைகள் என்ற நிலை எட்டப்படும்.
2020-க்குள் காத்திருப்போர் பட்டியலை நீக்க இலக்கு: போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததற்கு, ரயில்வேயில் குறைவான நிதி ஒதுக்கீடே காரணம். எனவே, அடுத்த 4 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பெட்டிகள் அனைத்தும் நவீன மயமாக்கப்படும்.
2020-க்குள் ரயில் பயணத்துக்காக காத்திருப்போர் பட்டியலே இல்லை என்ற நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (சி.சி. டி.வி.) பொருத்த வேண்டும்' என விழாவில் பங்கேற்ற எம்.பி.க்கள் பேசினர்.