
வழக்குரைஞர் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களைக் கைவிட வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள்
முற்றுகையிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், கீழமை நீதிமன்றங்களில் பணிகள் முற்றிலும் முடங்கின.
போராட்டத்தையொட்டி நடைபெற்ற மறியலால், சென்னை பாரிமுனையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒழுங்கீனமாக நடப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, வழக்குரைஞர்கள் சட்ட விதிகளில் புதிய திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் மேற்கொண்டது.
இவை தங்களது நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வழக்குரைஞர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, திருத்தங்கள் பரிசீலனை, கருத்துகள் ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட
நீதிபதிகள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் சமசரம் ஏற்படவில்லை.
இந்தப் பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உயர் நீதிமன்றமும் அறிவித்தது. இதை வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழு ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை திட்டமிட்டபடி என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், 126 வழக்குரைஞர்களை இடை நீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
காலையிலேயே திரண்ட வழக்குரைஞர்கள்: போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்குரைஞர்கள் அதிகாலையிலேயே திரண்டு உயர் நீதிமன்றத்தின் 7 நுழைவு
வாயில்களில் முன்பும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் நின்றிருந்தனர்.
பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸார்: எந்தவித அசம்பாவித நிகழ்வும் நடைபெறாமல் இருப்பதற்கு, சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நீதிபதிகள் நுழைவு வாயில் உள்பட
முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு: வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழையாமல் இருக்க, இரும்புத் தடுப்புகளை கொண்டு பாதுகாப்பு வளையத்தை போலீஸார் ஏற்படுத்தினர். இருப்பினும், நுழைய முற்பட்ட
வழக்குரைஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, அகில இந்திய பார் கவுன்சில் தலைவர், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் ஆகியோருக்கு எதிராக வழக்குரைஞர்கள் கடும் சொற்களால் கோஷமிட்டனர்.
நூதனப் போராட்டம்: இந்த நிலையில், முத்துசாமி சாலையில் அமைக்கப்பட்ட தாற்காலிக மேடை அருகே அகில இந்திய பார் கவுன்சில் தலைவர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய 2 பேரின்
உருவப் படங்களை தீ வைத்து, பாடையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு:
போராட்டத்தில் பங்கேற்பதற்காக பகல் 12 மணி வரை வழக்குரைஞர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து கொண்டே இருந்தனர். இதனால், பாரிமுனையில் வழக்குரைஞர்களே பெருமளவில் காணப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திடீரென சாலை மறியலிலிலும் வழக்குரைஞர்கள்
ஈடுபட்டனர். இதுதொடர்பாக 500 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடைகள் மூடல்: இதனால், பாரிமுனையை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியன மூடப்பட்டு இருந்தன. அந்தப் பகுதிகளில் காலை முதலே பதற்றம் நிறைந்து
காணப்பட்டது.
இரவு வரை நீடிப்பு: சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை சென்னையை விட்டு வெளியேறாமல் போராடுவோம் என்றும் வெளியூர்களில் இருந்து வந்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி வேதனை
வழக்குரைஞர்கள் போராட்டம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தெரிவித்தார்.
போராட்டம் நடைபெற்று வந்த நிலையிலும், எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது வழக்குரைஞர் சூரிய பிரகாசம் ஆஜராகி,
"உயர்நீதிமன்றப் பதிவுத்துறை வெளியிட்ட வழக்கு விவரப் பட்டியல்களில் வழக்குகள் உள்ளன என்பதை எடுத்துச் சொல்லியும் அனுமதிக்க மறுக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களையும்
போலீஸார் மூடி பூட்டு போட்டனர்' என்றார்.
இதைத் தொடர்ந்து, எஸ்.கே.கௌல் கூறியதாவது: உயர் நீதிமன்றத்தில் நிலவும் சூழல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. முற்றுகையிட போவதாக வழக்குரைஞர்கள் அச்சுறுத்தினால், என்ன செய்ய
முடியும்? புதிய திருத்தத்தில் ஏதாவது ஆட்சேபம் இருந்தால், நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையிலான 5 நீதிபதிகள் குழுவிடம் தங்களது கருத்துகளை வழக்குரைஞர்கள் தெரிவிக்கலாம் என்று பல
முறை கோரிக்கை விடுத்து விட்டோம். யாரும் இதை செய்ய முன் வரவில்லையே? இது துரதிருஷ்டவசமானது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில்தான், புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஏதாவது
ஆட்சேபம் இருந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்?: நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற அறைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினால், பொது மக்கள்
என்ன நினைப்பார்கள்? என்று வழக்குரைஞர்களை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
தலைமை நீதிபதி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: போராட்டத்தின் விளைவாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாந்தோம் சாலையில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
எஸ்.கே.கௌல் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். இவரது வீட்டையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதி, இந்தப் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. அங்கு போராட்டக்காரர்களை தடுத்தும் நிறுத்தும் வகையில், தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிலைமை சரியாகும் வரை நீடிக்கும் என போலீஸார் கூறினர்.