

மயிலம்: மயிலம் அருகே திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், மயிலம்-பேரணி பகுதிகளுக்கு இடையே உள்ள நெடி பகுதியில் ரயில் தண்டவாளம் செல்கிறது. இதன் கீழ் பகுதியில் மக்கள் கடந்து செல்ல வசதியாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவில் பெய்த கன மழையால், பாலத்தின் மேல் பகுதியில், தண்டவாள ஸ்லீப்பர் கட்டையில் மண் அரிப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து திண்டிவனம் ரயில் நிலைய அதிகாரி ரவிச்சந்திரன், பொறியாளர் பிரிவு அதிகாரிகள் கார்த்திக்பாலாஜி, சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்க்கொண்டனர்.
இதையடுத்து சீரமைப்புப் பணி நடைபெற்றது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ஜல்லி, மணல் கொட்டி சீரமைத்தனர். காலை 7 மணியளவில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதால் திருச்செந்தூர்-சென்னை விரைவு ரயிலும், புதுச்சேரி-சென்னை பயணிகள் ரயிலும் 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றன. சீரமைப்புப் பணிகள் 9 மணியளவில் முடிவடைந்தது. இருப்பினும், இப்பகுதியில் சென்றபோது ரயில்கள் பாதுகாப்பு கருதி குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.