குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை தொடக்கம்

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை விழா வியாழக்கிழமை குன்றத்தூரில் தொடங்கியது.
குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை தொடக்கம்

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை விழா வியாழக்கிழமை குன்றத்தூரில் தொடங்கியது.

குன்றத்தூர் பகுதியில் 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், 2-ஆம் குலோந்துங்க சோழனின் அமைச்சரவையில் முதல் அமைச்சராக பணியாற்றியவர். குலோந்துங்க சோழன் கேட்டுக் கொண்டதற்கிணங்க 63 நாயன்மார்கள் பற்றி அவர் பெரியபுராணம் இயற்றினார். சேக்கிழாருக்கு குன்றத்தூர் பகுதியில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பூச நட்சத்திரத்தில் சேக்கிழார் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சேக்கிழார் விழா குன்றத்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு அறநிலையத் துறை வேலூர் மண்டல இணை ஆணையர் சிவாஜி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனை குழு தலைவர் காமராஜ், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மெய்கண்டார் பீடம் 232-ஆவது குருமகா சன்னிதானம் திருவம்பல தேசிக ஞானபிரகாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி சிறப்புரையாற்றி, திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். விழாவில் அறநிலையத் துறையைச் சேர்ந்த காஞ்சிபுரம் உதவி ஆணையர் பரணிதரன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேக்கிழார் கோயிலில் மாதந்தோறும் ஞானவேள்வி நிகழ்ச்சி

சென்னை, ஜூன் 4: குன்றத்தூரிலுள்ள சேக்கிழார் திருக்கோயிலில் "மாதந்தோறும் ஞானவேள்வி' என்ற புதிய நிகழ்ச்சி வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளர் ச.ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெய்வச் சேக்கிழார் பெருமானின் குருபூஜை நாள் விழா குன்றத்தூரிலுள்ள சேக்கிழார் திருக்கோயிலில் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஞானவேள்வி எனும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. மாதந்தோறும் அறிஞர்களின் சொற்பொழிவும், திருமுறை இன்னிசையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்று மாலை 4.00 மணியளவில் தொடங்கும் இந் நிகழ்ச்சிக்கு நீதியரசர் பொன்.பாஸ்கரன் தலைமை வகிக்கிறார். கோடிலிங்கம் குழுவினரின் திருமுறை இன்னிசையும், அதைத்தொடர்ந்து "சேக்கிழார் பெருமை' என்ற தலைப்பில் பேராசிரியர் புரிசை நடராஜன் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் சென்னை தொழிலதிபர் வை.திருமாறன், ஒசூர் சி.வை.அறிவானந்தம், விழாக்குழு துணைத் தலைவர் ந.ச.ஆளவந்தார். சிவ.தணிகைமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அன்றிரவு, சேக்கிழார் அருட்சோதியில் கலக்கும் நிகழ்ச்சி, குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயிலில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com