
பொதுமக்கள், பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.வெற்றிவேல். இவர் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, அதிகாலை 4.30 மணியளவில் தனது நண்பர்களான டெல்லி கணேஷ், சாந்தகுமார் ஆகியோருடன் இணைந்து குன்றத்தூர் - திருமுடிவாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டார். இதை அவரது நண்பரான அஜித் ஒளிப்பதிவு செய்தார். அப்போது, டெல்லி கணேஷ் தனது மோட்டார் சைக்கிள் அதிவிரைவாக ஓட்டி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அஜீத் மீது வேகமாக மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் டெல்லி கணேஷ் இறந்தார்.
இதுதொடர்பாக, பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வெற்றிவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரருக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இவர், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகைக்கு கார் ஓட்டும் ஓட்டுநர் ஆவார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபர்கள் உருவாக்கிய "கட்செவி அஞ்சல்' குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார். ஆகையால், இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீஸார் தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் கைது செய்யவும் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பந்தயத்தில் ஈடுபட்ட இரு மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைப்பதுடன், புலன் விசாரணைக்கும் இடையூறு ஏற்படுத்துவார் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த வழக்கில் பல சாட்சிகளிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை, மருத்துவச் சான்றிதழ்களும் பெற வேண்டியதுள்ளது என அரசு தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
போலீஸாரும் கூட்டு?: அதேநேரத்தில், சென்னை மாநகரில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுத்து நிறுத்தக்கூட முடியாத நிலையில் இருக்கும் காவல் துறையின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சென்னையில், மெரீனா கடற்கரை சாலை முதல் அடையாறு வரையிலும், துரைப்பாக்கம் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என பல இடங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதைக் கட்டுப்படுத்துவதற்கு காவல் துறையால் முடியவில்லை என்றால், இதில் காவல் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதோ என்று சந்தேகம் கொள்ள வேண்டியதுள்ளது.
பந்தயம் நடைபெறும் சாலைகளில், காவல் துறை கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி இருந்தால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாகக் கண்டறிவதுடன், இவர்கள் மீதான வழக்கு விசாரணையின்போதும் ஒளிப்பதிவான காட்சியும் உதவிக்கரமாக இருக்கும்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்..: பந்தயத்தில் ஈடுபடுபவர்களால், பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பந்தயத்துக்கென வடிவமைக்கப்படும் வாகனங்களால் அதிக சத்தம் எழுவதால், ஒலி மாசும் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அமைதியான முறையில் நடந்து செல்ல முடியவில்லை.
எனவே, மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெறுவதைத் தடுக்க காவல் துறையினருக்கு பொதுமக்கள் உதவிக்கரமாக, உறுதுணையாகவும் இருக்க வேண்டும்.
மெக்கானிக் மீது நடவடிக்கை..: மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது வாகனங்களில் அதிக ஒலி வரும்படி செய்கின்றனர். வாகனத்தை மாற்றி வடிவமைத்துத் தரும் மெக்கானிக் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவு நகலை சென்னை காவல் துறை ஆணையருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதையடுத்து காவல் துறை ஆணையர், அனைத்து காவல் நிலையங்களுக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தைக் கட்டுப்படுத்த தகுந்த அறிவுரைகளை வழங்குவதற்கு வசதியாக இருக்கும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.