
டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார். இதனால், ஏழை. நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை புதன்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளன. உலக சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதில் இருந்து மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. விலை உயர்த்தப்படும் போதெல்லாம் உலகச் சந்தையில் பெட்ரோல், டீசலுக்கு நிலவும் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய காரணங்களாலேயே விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருள்களை தயாரிப்பதுடன், தேவையான அளவு கச்சா எண்ணெய்யைத் தான் இறக்குமதி செய்கின்றன.
கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருள்களை விற்பனை செய்கின்றன. இந்தச் சூழலில், உலகச் சந்தையில் பெட்ரோல், டீசலுக்கு நிலவும் விலையை அடிப்படையாக வைத்து அவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய விலையின் அடிப்படையில் உள்ளூர் விலையை நிர்ணயிப்பது தவறாகும்.
இதனை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால், இந்தத் தவறான கொள்கை இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த தவறான அடிப்படையிலேயே இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதிப்பு: கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் பல தவணைகளில் பெட்ரோலுக்கு ரூ.11.77-ம், டீசலுக்கு ரூ.13.57 என்ற அளவிலும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதனுடைய பயன் மக்களை சென்றடைய விடாமல் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது நியாயமானது அல்ல.
இப்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர வழி ஏற்படும். எனவே, எண்ணெய் நிறுவனங்களால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.