மருத்துவர்களும், பொறியாளர்களும் இணைய வேண்டும்:பிரதமரின் ஆலோசகர் வலியுறுத்தல்

மருத்துவத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இளம் மருத்துவர்கள் பொறியாளர்களோடும், தொழில்முனைவோருடனும் இணைய வேண்டும் என்று பிரதமரின் ஆலோசகர் (தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில்) டாக்டர் எஸ்.ராமதுரை கூறினார்.
மருத்துவர்களும், பொறியாளர்களும் இணைய வேண்டும்:பிரதமரின் ஆலோசகர் வலியுறுத்தல்
Updated on
1 min read

மருத்துவத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இளம் மருத்துவர்கள் பொறியாளர்களோடும், தொழில்முனைவோருடனும் இணைய வேண்டும் என்று பிரதமரின் ஆலோசகர் (தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில்) டாக்டர் எஸ்.ராமதுரை கூறினார்.

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ராமதுரை பேசியதாவது:-

மருத்துவத் துறையில் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மரபணுத் துறையும், கணினித் துறையும் இணைந்து மருத்துவத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட தொலைதொடர்பு மருத்துவத்தின் மூலம் தொலைதூரத்தில் உள்ள மக்களின் உயிர்களைக் கூட மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணினி மூலம் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளிநோயாளிகளின் காத்திருப்பு நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு 30 லட்சம் நோயாளிகள் பயனடைகின்றனர்.

நோயாளிகளின் பதிவேடுகளை கணினிமயமாக்குவதன் மூலம் மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மையும், திறனையும் அதிகரிக்க முடியும்.

தொலைதொடர்பு மருத்துவம், நோய் அறிகுறிகளை கணிக்கும் முறைகள் ஆகியன இன்றைய இளம் மருத்துவர்களுக்கு உள்ள முக்கிய தொழில் வாய்ப்புகளாகும். இதற்காக மருத்துவர்கள் பொறியாளர்களோடும், தொழில் முனைவோர்களோடும் இணைய வேண்டும். இதுதொடர்பான ஆய்வுகளின் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை இந்தியாவிலேயே குறைந்த விலையில் தயாரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அபிலாஷினி மனோகரன் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். 238 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 23 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.

விழாவில் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் ஜெ.எஸ்.என்.மூர்த்தி, ஆய்வுத் துறை தலைவர் டாக்டர் எஸ்.பி.தியாகராஜன், துறைத் தலைவர் டாக்டர் கே.வி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com