
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தேமுதிக சார்பில் ஏற்கெனவே 2 தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் பெருமளவு வரவேற்றுள்ளனர். அடுத்தபடியாக பெண்கள் நலனைச் சார்ந்து தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். பின்னர், பொதுவான தேர்தல் அறிக்கையாக தன்னிறைவு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும்.
இந்த தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களுக்கு இடமில்லை. திமுக, அதிமுகவைப் போன்று இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் எண்ணம் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மட்டுமே இடம்பெறும்.
கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடும் அறிவிப்பு நிலையிலேயே நின்றுவிட்டது. திமுக, அதிமுக ஆட்சிகளில் தமிழகம் எந்தவித வளர்ச்சியும் பெறவில்லை. எனவே, இந்த கட்சிகளுக்கு மாறாக, தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்கான மாற்றாக தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையக் கூடும். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்.
லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் பிரதான கொள்கை. வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் நிகழ்வை தமிழக தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளது.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைப்பு குறித்து பாஜக விமர்சனம் செய்கிறது. கடந்த தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்தோம். அவர்கள் மீது மரியாதை வைத்துள்ளோம். நாகரிகமான அரசியல் செய்யவே தேமுதிக விரும்புகிறது.
தமிழகத்தில் இப்போது பன்முகப் போட்டி உருவாகியுள்ளது. இது ஆரோக்கியமான போட்டியாகும். இதனால், வாக்குகள் சிதறி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூற முடியாது. மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களிக்கத் தயாராக உள்ளனர். தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைப் போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.