
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர மாணவர்கள் பாடுபட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மாணவரணியின் கலந்துரையாடல் கூட்டம் மாதவரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் கோவி. செழியன், பூவை ஜெரால்டு, துணைச் செயலாளர்கள் எஸ்.மோகன், மன்னை சோழராசன், எழிலரசன், தமிழரசன், உமாசங்கர், இலக்குவன், கவிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் மாணவர்களுக்கான சலுகைகள் எதுவும் முறையாக கிடைக்கவில்லை. மாணவர்கள் எதிர்காலத் தூண்கள். அன்றைய காலத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்த நிலைமாறி, இன்று மாணவர்களிடம் பெற்றோர்கள் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களாக இருந்துதான் ராஜாஜி, காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், இந்திராநூயி ஆகியோர் தலைவர்களாக உருவெடுத்தனர்.
நானும் மாணவராக இருந்துதான் தற்போது உங்கள் முன் நிற்கிறேன். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சுமார் 10 முதல் 50 நபர்களைச் சந்தித்து, திமுகவின் சாதனைகளை விளக்கி வரும் மே 16-இல் வாக்களித்து மீண்டும் திமுக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்.
தற்போதைய அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். தேர்தலில் திமுக வெற்றி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே முதல் பணி என்றார்.
கூட்டத்தில், மாவட்ட திமுக செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணி, நிர்வாகிகள் கிரிராஜன், சங்கரி நாராயணன், ஐசிஎப்.முரளிதரன், கவிதா நாராயணன், பா.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.