
திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வராததால், இக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவறு நடக்கும் என்ற புகாரைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடமாற்றத்துக்கு அதிமுக ஆட்சேபம் தெரிவித்துள்ளது. திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வராததால், இக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கடந்த 2006 இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றி உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல், சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை.
தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப் பட்டுவாடா செய்ய இருப்பதாக, பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.