
சமூக அக்கறையுள்ள நல்ல மனிதர்களை உருவாக்கியது பாரம்பரிய விளையாட்டுகள்தான் என்றார் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஜி.எஸ்.தனபதி.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே தெற்கு பொன்னம்பட்டியில் ரோஸ், டி.டி.எச்- தொண்டு நிறுவனங்கள் இணைந்து சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய விளையாட்டு விழாவைத் தொடக்கி வைத்து
பேசியதாவது, நமது பாரம்பரிய விளையாட்டுகள், உடலுக்கும், மனதுக்கும் வலு சோ்ப்பதுடன், கூடி வாழ்தல், சமூக நல்லுணர்வு, ஒற்றுமை, மகிழ்ச்சி, சமூக அக்கறை போன்றவற்றை உணரவைத்து சமுதாய அக்கறையுள்ள நல்ல மனிதர்களை உருவாக்கியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியுள்ள விளையாட்டுகள், குழந்தைகளுக்குள் வன்மம், கோபம், எரிச்சல், போட்டி மனப்பான்மை போன்ற கசப்புணர்வுகளை ஏற்படுத்தி குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் பாதிப்புகளை உருவாக்கி சமுதாய அக்கறையற்ற, சுயநலத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்ட, இயற்கை வளங்களைச் சூறையாடும், சந்ததிகளை உருவாக்கி வருவது வேதனைக்குரியது என்றார்.
ரோஸ் நிறுவன இயக்குநர் ஏ. ஆதப்பன் பேசுகையில், மே-28-ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் விளையாட்டு உரிமை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காணாமல் போன நமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுத்து குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், நம் வாழ்வாதாரமாக இருக்கும், பாரம்பரிய விவசாயத்துக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் உள்ள தொடர்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையிலும் இந்த விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. தொலைக்காட்சி, இணைய தளம், வீடியோ கேம், செல்பேசி போன்றவை நகர குழந்தைகளின் வாழ்க்கையை மட்டுமல்ல, கிராம குழந்தைகள் வாழ்க்கையையும், குழந்தைத் தனத்தையும் காணாமல் செய்து எதிர்காலத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றார்.