
தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயருகிறது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயருகிறது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், பால், தயிர் விலை உயர்வுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
2-ஆவது முறையாக விலை உயர்வு: தமிழகத்தில் திருமலா பால் நிறுவனம் திங்கள்கிழமை (மே.30) முதல் பால், தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தி அறிவித்துள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை, எங்களது பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.
நிகழாண்டில் 2 முறை தனியார் பால், தயிருக்கான விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. திருமலா நிறுவனம், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 கிராம் அளவை குறைத்து, ஒரு கிலோவுக்கு ரூ.8.57 வரை மறைமுக விலை ஏற்றத்தை பொதுமக்கள் மீது திணித்துள்ளது. மக்களைப் பாதிப்புக்குள்ளாகும் இந்த விலை உயர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழக அரசு தலையிட வேண்டும்: இல்லையெனில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தனியார் பால் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்றார் அவர்.