
மழை பொழியவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும் வேண்டி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வலையப்பட்டி பச்சைகாவடி என்பவரது தலைமையில் 15 பேர் கொண்ட ஆன்மிகக் குழுவினர் பாதயாத்திரையாக அறுபடை வீடுகளுக்குச் செல்கின்றனர். இப்பயணத்தின் இறுதியாக திருத்தணியை அடையும் வழியில் இக்குழுவினர் சனிக்கிழமை அரக்கோணம் வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வலையப்பட்டியைச் சேர்ந்த பச்சைகாவடி (65) என்பவரது தலைமையில் 15 பேர் கொண்ட ஆன்மிகக் குழுவினர், நாட்டின் நலன் காக்கவும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான மழை பொழியவும் வேண்டி, பிள்ளையார்பட்டியில் இருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரையாக ஏப்ரல் 7-ஆம் தேதி புறப்பட்டனர்.
இக்குழுவினர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை ஆகிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, திருத்தணி செல்லும் வழியில் சனிக்கிழமை அரக்கோணம் வந்தனர். அரக்கோணம் வந்த இக்குழுவினருக்கு இந்துமுன்னணியின் அரக்கோணம் நகரத் தலைவர் ஜெ.குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் இந்துமுன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ரகுநாத், நகரச் செயலாளர் வி.மணிகண்டன், துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்குழுவில், சென்னையைச் சேர்ந்த காசிஸ்ரீ தனசேகரன் (60), சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்தவரும், அழகப்பா பல்கலைகழகத்தில் துணைப் பதிவாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவருமான கே.காளைராஜன் (59), புதுகோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த எஸ்.துரைசாமி (76), திருச்சியைச் சேர்ந்த ஆர்.அங்கமுத்து (70), திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.மணிகண்டன் (39) உள்ளிட்ட 15 பேர் சேர்ந்து பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இக்குழுவினர் அரக்கோணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டு திருத்தணியை நோக்கி தங்களது பாதயாத்திரையைத் தொடர்ந்தனர்.