ராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல், அவரது சொந்த ஊரான, திருநெல்வேலி...
பிரேத பரிசோதனைக்கு பின்னர், சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட ராம்குமாரின் உடல்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர், சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட ராம்குமாரின் உடல்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல், அவரது சொந்த ஊரான, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமாரை (22) கடந்த ஜூலை 1-ஆம் தேதி இரவு போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செப்டம்பர் 18-ஆம் தேதி சிறை வளாகத்தில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். மின் வயரை பற்களால் கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை குழுவில், தனியார் மருத்துவரையும் நியமிக்க வேண்டுமென அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், குழுவில் மேலும் 2 மருத்துவர்களை நியமித்தது. மேலும், மனுதாரர் வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்து, பிரேத பரிசோதனையை செய்வதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தடைவிதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் பரமசிவம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, 13 நாள்களுக்குப் பின்பு சனிக்கிழமை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, ராம்குமார் உடல் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியளவில் கொண்டுவரப்பட்டது. மாலையில் மீனாட்சிபுரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
ராம்குமாரின் வழக்குரைஞர் ராமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவாதி கொலை வழக்கிற்கும், ராம்குமாருக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இந்த இரு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து அரசை வலியுறுத்துவோம். உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்தபின் மீண்டும் வழக்கை சந்திப்போம்
என்றார்.
மீனாட்சிபுரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தலைமையில், ஏ.எஸ்.பி. சசாங் சாய் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com