காவிரி பிரச்னைக்காக அக். 25-இல் அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி பிரச்னைக்காக அக். 25-இல் அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 25-இல் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும்...

காவிரி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 25-இல் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், விவசாய சங்க அமைப்புகளின் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமாகா, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்பட கட்சிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் ஏகோபித்த குரலாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக குறுவை பொய்த்துப் போய்விட்ட நிலையில், இந்த ஆண்டு சம்பாவையாவது காப்பாற்றுவதற்குத் தேவையான தண்ணீர் வேண்டும் என்பதற்காக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டி வருகின்றன.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரிப் பிரச்னை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை அக்டோபர் 19-இல் நடைபெற்றது.
விசாரணையின்போது மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.
தமிழகத்துக்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலங்களின் மேல்முறையீடு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்னை முன்னணிக்கு வந்துள்ளது.
சம்பாவைக் காப்பாற்ற முடியாது:
மேட்டூர் அணையில் நீர் இருப்பு இன்னும் 20 நாள்களுக்கு மட்டுமே பாசனத்துக்குத் திறக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.
தற்போது உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென்று அளித்த உத்தரவினை முழுமையாக நிறைவேற்ற முன்வந்தாலும்கூட, அந்தத் தண்ணீரை வைத்து சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை.
ஆகவே, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, காவிரிப் பிரச்னையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக நடத்தும் கூட்டம்: இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில் அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அக்டோபர் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்குக் கூட்டப்பட்டுள்ளது. இதில், பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். மேலும், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தலைவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com